தினத்தந்தி
குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சிக்கன் மற்றும் உருளைக்கிழங்கை வைத்து மாலை நேர ஸ்நாக்ஸாக சுவையான சிக்கன் கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: எலும்பு நீக்கிய கோழி இறைச்சி - 500 கிராம், உருளைக்கிழங்கு - 250 கிராம், வெங்காயம் - 100 கிராம், இஞ்சி - 10 கிராம், பச்சை மிளகாய் - 10 கிராம், ரொட்டித்தூள் - 50 கிராம், எண்ணெய் - 100 மி.லி., கறிவேப்பிலை, உப்பு மற்றும் மிளகுத்தூள் தேவையான அளவு.
முதலில் கோழி இறைச்சியை நன்றாக சுத்தம் செய்து அரைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலை நீக்கி நன்றாக மசித்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்து வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, நறுக்கிய பொருட்களுடன் கறிவேப்பிலையையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர் அதில் அரைத்த கோழி இறைச்சியை சேர்த்து நன்றாகக் கிளறவும். கோழி இறைச்சி நன்கு வெந்ததும், மசித்த உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து அனைத்தையும் நன்றாகக் கலக்கவும்.
கலவை நன்றாக ஒன்றாகச் சேர்ந்ததும் அடுப்பை அணைத்து, அதை சிறிது நேரம் ஆறவிடவும். பின்னர் சிறு உருண்டைகளாகப் பிடித்து, கைகளால் வட்டமாகத் தட்டி கட்லெட் வடிவில் தயார் செய்யவும்.
தயார் செய்த கட்லெட்டுகளை ரொட்டித்தூளில் நன்றாகப் புரட்டி வைக்கவும். பின்னர் தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி, கட்லெட்டுகளை வைத்து மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
இப்போது சுவையான மற்றும் மொறுமொறுப்பான சிக்கன் கட்லெட் தயார். தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னியுடன் பரிமாறினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.