தினத்தந்தி
தேவையான பொருட்கள்: கடலை மாவு - 1 கப், அரிசி மாவு - ½ கப், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், பூண்டு - 6 பல், சீரகம் -1 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, கடலை எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: முதலில் கடலை மாவு மற்றும் அரிசி மாவை நன்றாக சலித்து எடுத்துக் கொள்ளவும். இதனால் மாவில் இருக்கும் சிறிய கற்கள் அல்லது துகள்கள் நீங்கி, எண்ணெயில் பொரிக்கும் போது வெடிக்கும் அபாயம் தவிர்க்கப்படும்.
பூண்டில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் சலித்த மாவுகளை சேர்த்து, அதனுடன் சீரகம், உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் மற்றும் பூண்டு விழுதை சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் தெளித்து, சேவு பிழியும் அளவிற்கு கெட்டியான பதத்தில் மாவை பிசையவும்.
கடாயில் கடலை எண்ணெயை நன்றாக காயவைக்கவும். சேவு அச்சில் மாவை நிரப்பி, நேரடியாக சூடான எண்ணெயில் பிழியவும்.
மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து, எண்ணெயை வடித்து எடுத்து ஆறவிடவும்.
முழுமையாக ஆறிய பிறகு காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்தால் பல நாட்கள் மொறுமொறுப்பாக இருக்கும்.
சுவையான, காரசாரமான மாலை நேர ஸ்நாக்ஸ் காராச்சேவு தயார். தேநீர் அல்லது காபியுடன் பரிமாறினால் இன்னும் சுவையாக இருக்கும்.