கடை ஸ்டைல் உருளைக்கிழங்கு சமோசா!

தினத்தந்தி

மாலை வேளையில் சுக்கு காபியுடன் மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு சமோசா சாப்பிடுவது அருமையான அனுபவமாக இருக்கும். வீட்டிலேயே எளிய முறையில் சுவையான உருளைக்கிழங்கு சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: மைதா மாவு – 200 கிராம், உருளைக்கிழங்கு – 2, வெங்காயம் – 2, சீரகம் – 1 தேக்கரண்டி, மிளகாய்த்தூள் – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சீரகம் தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

அதனுடன் வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து, மிளகாய்த்தூள் மற்றும் உப்பு போட்டு நன்றாகக் கிளறவும். இப்போது சமோசாவுக்கான உருளைக்கிழங்கு மசாலா தயார்.

அடுத்து மைதா மாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசைந்து கொள்ளவும். பின்னர் சிறிய உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போல் திரட்டி அரை வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.

வெட்டிய மாவின் ஒரு பாதி விளிம்பில் தண்ணீர் தடவி, மறுபாதி விளிம்புடன் சேர்த்து ஒட்டி கூம்பு வடிவில் மடிக்கவும். அதன் உள்ளே தயாரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவை நிரப்பி, மீதமுள்ள விளிம்புகளிலும் தண்ணீர் தடவி நன்றாக ஒட்டவும்.

இதேபோல் அனைத்து மாவிலும் மசாலாவை வைத்து சமோசாக்களைத் தயார் செய்யவும். கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் காய்ந்ததும் சமோசாக்களைப் போட்டு பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் பொரித்தெடுக்கவும்.

சுவையான, மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு சமோசா தயார். இதனை சுக்கு காபி அல்லது புதினா சட்னியுடன் பரிமாறலாம்.

குழந்தைகளுக்குப் பிடித்தமான இனிப்பு பூரி!