மொறுமொறு உருளைக்கிழங்கு தயிர் சீஸ் போண்டா.. மாலை நேர ஸ்நாக்ஸ் ரெடி..!

தினத்தந்தி

மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன் சாப்பிட சூப்பரான ஸ்நாக்ஸ் வேண்டுமா? உருளைக்கிழங்கு, தயிர் மற்றும் சீஸ் சேர்த்து செய்யும் இந்த போண்டா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும்.

தேவையான பொருட்கள்: வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1, துருவிய சீஸ் - 1 கப், சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன், மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், கெட்டித்தயிர் - அரை கப், சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், செலரி கீரை - 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு.

முதலில் ஒரு பாத்திரத்தில் சோள மாவு, மைதா மாவு, மிளகாய்த்தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியான மாவாக கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்குடன் துருவிய சீஸ் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கு உருண்டைகளை மாவு கலவையில் முக்கி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்க வேண்டும்.

அதன்பின் தயிரில் சாட் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பொரித்த போண்டாக்களை அந்த தயிர் கலவையில் சேர்த்து கிளற வேண்டும்.

இறுதியாக மேலே செலரி கீரை தூவி பரிமாறினால், சுவையான உருளைக்கிழங்கு தயிர் சீஸ் போண்டா தயார்.

வெளியில் வாங்கும் ஸ்நாக்ஸ்களுக்கு பதிலாக வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய இந்த ரெசிபி மாலை நேரத்திற்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

நாவில் வைத்தவுடன் கரையும் மதுரை ஸ்பெஷல் பால் பன்.. வீட்டிலேயே செய்வது எப்படி?