தினத்தந்தி
மதுரையின் பிரபலமான இனிப்புகளில் ஒன்றான பால் பன், மென்மையான சுவையாலும் இனிப்பான பாகு ருசியாலும் அனைவரையும் கவர்கிறது. வீட்டிலேயே எளிய முறையில் இந்த சுவையான பால் பனை செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்: மைதா மாவு - 2 கப், சர்க்கரை - 2 கப், தயிர் - 4 ஸ்பூன், பொடித்த சர்க்கரை - 2 ஸ்பூன், சோடா உப்பு - 2 சிட்டிகை, நெய் - 2 ஸ்பூன், எண்ணெய் - தேவைக்கேற்ப, தண்ணீர் - தேவையான அளவு.
முதலில் ஒரு பாத்திரத்தில் நெய் மற்றும் பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்றாக அடிக்க வேண்டும். பின்னர் அதில் மைதா மாவு, தயிர் மற்றும் சோடா உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
அதன்பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை மிகவும் கட்டியாகவும் இல்லாமல், தளர்வாகவும் இல்லாமல் மென்மையாக பிசைந்து மூடி சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து சர்க்கரை மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் பாகு தயார் செய்ய வேண்டும். விருப்பமிருந்தால் ஏலக்காய் சேர்த்து மணத்தை அதிகரிக்கலாம்.
இப்போது தயார் செய்த மாவை சிறு உருண்டைகளாக அல்லது வட்ட வடிவமாக செய்து வைத்துக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தீயை குறைத்து அவற்றை பொன்னிறமாக பொரிக்க வேண்டும்.
பன் நன்றாக வெந்ததும் எண்ணெயில் இருந்து எடுத்து உடனே சர்க்கரை பாகில் போட்டு சில நிமிடங்கள் ஊறவிட வேண்டும்.
சிறிது நேரத்தில் மென்மையாக நாவில் வைத்தவுடன் கரையும் சுவையான மதுரை ஸ்பெஷல் பால் பன் தயார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இனிப்பு இது.