சுவையான வாழைக்காய் கூட்டு... வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?

தினத்தந்தி

வாழைக்காய் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் பல்வேறு சத்துக்கள் நிறைந்த காய்கறியாகும். பச்சைப்பயறுடன் சேர்த்து செய்யும் வாழைக்காய் கூட்டு சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்: 1 வாழைக்காய், 1 கப் பச்சைப்பயறு (அல்லது பயத்தம் பருப்பு), 6 பச்சை மிளகாய், 2 டீஸ்பூன் தேங்காய்த் துருவல், 1 டீஸ்பூன் சீரகம், ¼ டீஸ்பூன் மஞ்சள்தூள், 1 டீஸ்பூன் உப்பு, 1 டீஸ்பூன் எண்ணெய், ½ டீஸ்பூன் கடுகு, ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை.

செய்முறை :முதலில் பச்சைப்பயறு அல்லது பயத்தம் பருப்பை 6 முதல் 8 மணி நேரம் வரை தண்ணீரில் ஊறவைக்கவும். வாழைக்காயின் தோலை சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய் மற்றும் சீரகத்தை ஒன்றாக சேர்த்து மிருதுவாக அரைத்து விழுதாக தயார் செய்து கொள்ளவும்.

ஊறவைத்த பயிறை குக்கரில் போட்டு, அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து 1 அல்லது 2 விசில் வரும் வரை வேகவைக்கவும். அதேபோல் வாழைக்காய் துண்டுகளையும் தனியாக உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து, தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்னர் வேகவைத்த வாழைக்காய், வேகவைத்த பயறு மற்றும் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்றாகக் கிளறவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தேவையான உப்பையும் கலந்து ஒரு கொதி வரும்வரை சமைக்கவும்.

கலவை நன்றாகக் கொதித்து சற்று கெட்டியான பதத்திற்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான, சத்தான வாழைக்காய் கூட்டு தயார். இது சாதம், சாம்பார், ரசம் மற்றும் வத்தக்குழம்புடன் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.

இரும்புச்சத்து நிறைந்த பாலக்கீரை கூட்டு... சுவையும் ஆரோக்கியமும் ஒரே உணவில்!