தீபாவளி பண்டிகைக்காக வீட்டிலேயே பலவிதமான இனிப்பு, கார வகைகளைச் செய்து வைத்திருப்போம். ஆனால், அவற்றைச் சரியான முறையில் பாதுகாக்காவிட்டால் விரைவிலேயே சுவை மாறி, பதமும் கெட்டுப்போய்விடும். எனவே, வீட்டில் செய்யும் பலகாரங்கள் நீண்ட நாட்களுக்குப் புத்துணர்ச்சியுடனும் சுவையுடனும் இருக்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
காற்றுப் புகாத டப்பாக்களைப் பயன்படுத்துங்கள்; பலகாரங்களை எப்போதும் காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து வைக்க வேண்டும். இதனால் காற்றில் உள்ள ஈரப்பதம் பலகாரங்களில் புகுந்து அவை நமுத்துப்போவதைத் தவிர்க்கலாம்.
டிஷ்யூ பேப்பரைப் பயன்படுத்துங்கள்; எவர்சில்வர் அல்லது உணவுப் பாதுகாப்புக்கு ஏற்ற டப்பாக்களின் அடியில் சுத்தமான டிஷ்யூ பேப்பரை விரித்து, அதன் மேல் பலகாரங்களை வைக்கலாம். குறிப்பாக முறுக்கு, தட்டை போன்ற எண்ணெயில் பொரித்த பலகாரங்களில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை உறிஞ்ச இது உதவும்.
பலகாரங்களை ஆறவைத்த பிறகே டப்பாவில் வையுங்கள்; சுடச்சுடச் செய்த பலகாரங்களை உடனடியாக டப்பாவில் போட்டு மூடக்கூடாது. அவற்றை முழுமையாக ஆறவைத்த பிறகே டப்பாவில் எடுத்துவைக்க வேண்டும். இல்லாவிட்டால் உள்ளே உருவாகும் நீர்த்துளிகள் பலகாரங்களை விரைவில் கெட்டுப்போகச் செய்யலாம்.
எண்ணெயில் நன்றாகப் பொரித்து எடுங்கள்; முறுக்கு, தட்டை போன்ற பலகாரங்களைச் செய்யும்போது அவற்றில் உள்ள ஈரப்பதம் நீங்கி நன்றாக வெந்த பிறகே எண்ணெயிலிருந்து எடுக்க வேண்டும். சரியாக வேகவைக்கப்படாத பலகாரங்கள் விரைவில் நமுத்துப்போக வாய்ப்புள்ளது.
இனிப்பு, கார வகைகளைத் தனித்தனியாக வையுங்கள்; லட்டு, அதிரசம் போன்ற இனிப்புகளையும், முறுக்கு, தட்டை போன்ற கார வகைகளையும் ஒரே டப்பாவில் வைக்கக்கூடாது. தனித்தனி டப்பாக்களில் வைத்துப் பாதுகாத்தால் அவற்றின் சுவையும் மணமும் மாறாமல் இருக்கும்.
தரமான எண்ணெயைப் பயன்படுத்துங்கள்; பலகாரங்கள் செய்யும்போது தரமான சமையல் எண்ணெயைப் பயன்படுத்துவது அவசியம். ஏற்கெனவே பலமுறை சூடுபடுத்திய எண்ணெயைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இது பலகாரங்களின் சுவை மற்றும் தரத்தைப் பாதிக்கலாம்.
ஈரப்பதம் இல்லாத இடத்தில் வையுங்கள்; பலகாரங்கள் வைக்கும் டப்பாக்களும், கரண்டிகளும் ஈரமில்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். ஈரப்பதம் அதிகமுள்ள இடங்களில் வைப்பதைத் தவிர்த்து, உலர்ந்த இடத்தில் பாதுகாப்பாக வைக்கவும்.