தீபாவளி ஸ்பெஷல் சுவையான சுசியம் செய்வது எப்படி?

தினத்தந்தி

தீபாவளி பண்டிகை என்றாலே வீட்டில் பலகாரங்கள் செய்து கொண்டாடுவது தனி மகிழ்ச்சி. அந்த வகையில் கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய் சேர்த்து செய்யப்படும் சுசியம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் இனிப்பான சிற்றுண்டி. இந்தத் தீபாவளிக்கு சுவையான சுசியம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்; மைதா – 1 கப், வெல்லம் அல்லது பனைவெல்லம் – 1 கப், கடலைப்பருப்பு – 1 கப், துருவிய தேங்காய் – 1 கப், ஏலக்காய்த்தூள் – 1 தேக்கரண்டி, நெய் – 1 தேக்கரண்டி, உப்பு – சிறிதளவு, தண்ணீர் – தேவையான அளவு, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை; முதலில் கடலைப்பருப்பை நன்றாகக் கழுவி குக்கரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். ஒரு கடாயில் வெல்லத்தைப் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கரைக்கவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

மற்றொரு கடாயில் வேகவைத்த கடலைப்பருப்பு, வடிகட்டிய வெல்லப்பாகு, துருவிய தேங்காய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.

இந்தக் கலவை கெட்டியாகும் வரை வேகவிடவும். பின்னர் ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.

ஆறிய கலவையைச் சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவுப் பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். உருட்டி வைத்துள்ள உருண்டைகளை மைதா மாவில் நனைத்து, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

சுவையான பாரம்பரிய சுசியம் தயார்! தீபாவளி பண்டிகையின்போது வீட்டிலேயே இந்த இனிப்பான சுசியத்தைச் செய்து குடும்பத்தினருடன் மகிழ்ந்து சாப்பிடுங்கள்.

தீபாவளி ஸ்பெஷல் - மொறு மொறு முறுக்கு!