தினத்தந்தி
பழச்சாறு ஆரோக்கியமானதாக தோன்றினாலும் அதில் சர்க்கரை அதிகம் கலந்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பழச்சாறை சரியான வழியில் பருகினால் நன்மை பயக்கும்.
பழங்களை ஜூஸாக்கும் செயல்முறையின்போது அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடும். அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு பழச்சாறு சிறந்த தேர்வாக அமையாது
அதிலிருக்கும் சர்க்கரை ரத்த சர்க்கரை அளவை உயர்த்திவிடும். எடை அதிகரிப்புக்கும் வழிவகுக்கும். பழச்சாறுக்கும், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பாதிப்புகளுக்கும் தொடர்பு உண்டு.
அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்: பழச்சாறு தயாரிக்கும்போது பழங்களின் தோலை அகற்றுவோம். ஆனால் பல பழங்களின், தோலில்தான் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் கலந்திருக்கும்.
நார்ச்சத்து: பழச்சாறு பருகுவதில் மற்றொரு தீமை என்னவென்றால் அதில் நார்ச்சத்து முழுமையாக இருக்காது. பழங்களை ஜூஸாக பிழியும்போது அதிலிருக்கும் சர்க்கரை சாறில் கலக்கும். நார்ச்சத்து நீங்கிவிடும்.
மெல்லுதல்: உணவை மெதுவாகவும், சரியாகவும் மெல்லுதல் பற்கள் மற்றும் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். உணவை குறைந்தது 24 முறை மென்று சாப்பிட வேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
பசியை போக்கும்: பசியை போக்க சிறந்த வழி பழங்கள் சாப்பிடுவதுதான். சிற்றுண்டி நேரத்தில் பழங்கள் உண்ணும் போது பசி அதிகம் எடுக்காது. பழங்கள் அதிக கலோரிகளையும் வழங்குவதில்லை.
எடை நிர்வகிக்க உதவும்: பழங்கள் சாப்பிடுவது வயிறு நீண்ட நேரம் நிறைவாக இருப்பது போன்ற உணர்வை கொடுக்கும். உடல் எடை, நீரிழிவு, ரத்த சர்க்கரை போன்றவற்றை நிர்வகிக்க உதவும்.