தண்ணீரில் நனைந்தால் வெள்ளி கருப்பாகுமா? உண்மை என்ன?

தினத்தந்தி

தூய வெள்ளி என்பது 99.9% வெள்ளியால் உருவாக்கப்படுகிறது. இதில் வேறு எந்த உலோகங்களும் கலக்கப்படுவதில்லை. ஆனால், 925 ஸ்டெர்லிங் வெள்ளி என்பது 92.5% வெள்ளியுடன் 7.5% பிற உலோகங்கள், குறிப்பாக தாமிரம், கலந்து தயாரிக்கப்படுகிறது. வெள்ளி மிகவும் மென்மையான உலோகம் என்பதால், நகைகள் தயாரிக்கும்போது அதனுடன் மற்ற உலோகங்களைச் சேர்க்க வேண்டியுள்ளது. இதனால் ஸ்டெர்லிங் வெள்ளி நகைகள் வடிவமைப்பதற்கு ஏற்றதாக உள்ளது.

வெள்ளி நகைகள் வெள்ளை வெளேரென்று பளபளப்பாக இருக்கும். ஆனால், நாளாக நாளாக அவற்றின் நிறம் மங்கி கருப்பாக மாறுவதை பலரும் கவனித்திருப்பார்கள். இதற்கு வெள்ளியில் ஏற்படும் சில வேதியியல் எதிர்வினைகளே முக்கிய காரணமாகும்.

வெள்ளி நகைகளை அணிந்திருக்கும்போது அவை அதிக நேரம் ஈரப்பதத்துடன் தொடர்பில் இருந்தாலும் நிறம் மாறலாம். குறிப்பாக, ஸ்டெர்லிங் வெள்ளியில் கலந்திருக்கும் தாமிரம், சுற்றுப்புறத்தில் உள்ள ஈரப்பதம் மற்றும் பிற வேதிப்பொருட்களுடன் வினைபுரிவதால் நகைகளின் மேற்பரப்பில் கறை ஏற்பட்டு நிறம் மங்கலாம்.

எனவே, நீண்ட நேரம் தண்ணீரில் வேலை செய்ய வேண்டியிருந்தால், வெள்ளி நகைகளை கழற்றி பாதுகாப்பாக வைத்துவிட்டு பணிகளை மேற்கொள்வது நல்லது. குளிக்கும்போதும், நீச்சல் செல்லும்போதும் வெள்ளி நகைகளை அணியாமல் இருப்பது அவற்றின் பளபளப்பை நீண்ட காலம் பாதுகாக்க உதவும்.

வெள்ளியின் நிறம் மங்குவதற்கு கந்தகச் சேர்மங்களும் முக்கிய காரணமாகும். காற்றில் உள்ள கந்தகச் சேர்மங்களுடன் வெள்ளி வினைபுரியும்போது, அதன் மேற்பரப்பில் வெள்ளி சல்பைடு உருவாகிறது. இதன் காரணமாக வெள்ளி நகைகள் படிப்படியாக கருமையாகத் தோன்றுகின்றன.

காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும் பகுதிகளில் கந்தகச் சேர்மங்களின் தாக்கம் அதிகமாக இருக்கலாம். அத்தகைய சூழலில் தொடர்ந்து வெள்ளி நகைகளை அணிந்திருந்தால், அவை விரைவாக நிறம் மாற வாய்ப்புள்ளது.

வெள்ளி கருமையாவது வெள்ளியின் தரம் மோசமாகிவிட்டது என்பதற்கான அடையாளம் அவசியமில்லை. சுற்றுச்சூழல், ஈரப்பதம் மற்றும் காற்றில் உள்ள சில வேதிப்பொருட்களுடன் ஏற்படும் வினைகளாலும் இந்த நிறமாற்றம் ஏற்படலாம்.

காலை டிபனுக்கு எது பெஸ்ட்? இந்த 8 உணவுகளுக்கு சத்துத் தரவரிசை பாருங்க!