தினத்தந்தி
சாதம், கஞ்சி போன்ற உணவுகளில் பாதாம், முந்திரி அல்லது பன்னீர் துண்டுகளைத் தூவி பரிமாறலாம். அவை உணவுக்கு கூடுதல் சுவையையும் நறுமணத்தையும் சேர்க்கும்.
புளிக்குழம்பு வகைகளில் சிறிது உருளைக்கிழங்கு சேர்த்தால், குழம்பின் சுவையுடன் நிறமும் மேம்படும்.
கோழி இறைச்சி, மீன் போன்றவற்றை சமைப்பதற்கு முன்பு சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்து ஊறவைத்தால், சுவையாகவும் மென்மையாகவும் இருக்கும்
மீன் வதக்கும் போது மஞ்சள் தூள் மற்றும் சிறிது தயிர் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். இதனால் மீன் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.
சாதம், குழம்பு, வறுவல் போன்ற உணவுகளை சமைத்தவுடன் உடனடியாக பரிமாறாமல் சில நிமிடங்கள் மூடி வைத்தால், நறுமணம் நன்றாக இருக்கும்.
அப்பத்திற்கு மாவு அரைக்கும் போது தேங்காய், வெல்லத்துடன் நான்கு துண்டு அன்னாசிப் பழத்தையும் சேர்த்து அரைத்தால், அப்பம் கூடுதல் சுவையுடன் இருக்கும்.
வேகவைத்த கொண்டைக்கடலையுடன் வேகவைத்து உரித்த உருளைக்கிழங்கு, சாட் மசாலா, உப்பு, எலுமிச்சைச் சாறு மற்றும் கொத்தமல்லி சேர்த்து சுண்டல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
ஆரஞ்சுத் தோல்களை சிறு துண்டுகளாக நறுக்கி, வற்றல் குழம்பு தாளித்து கொதிக்கும் போது மூன்று அல்லது நான்கு துண்டுகளைச் சேர்க்கவும். இது குழம்பிற்கு தனித்துவமான சுவையைத் தரும்.
தேன்குழல் செய்யும்போது உளுத்தம் பருப்பை வறுத்துப் பயன்படுத்துவதுடன், ஒரு டம்ளர் பச்சரிசியையும் வறுத்து அரைத்துச் சேர்த்தால், மாவு பிசுபிசுப்பாக இல்லாமல் தேன்குழலை எளிதாகப் பிழியலாம்.