தினத்தந்தி
வீட்டை சுத்தம் செய்யும் போது தரை, மேசை, ஃபர்னிச்சர் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், கண்ணாடியை சுத்தம் செய்வதை பல நேரங்களில் மறந்து விடுகிறோம். இதனால் கண்ணாடியில் கறைகள் படிந்து, முகம் தெளிவாகத் தெரியாமல் போகும்.
சந்தையில் பல வகையான மிரர் கிளீனர்கள் கிடைத்தாலும், அவை விலை உயர்ந்ததாக இருக்கலாம். ஆனால் வீட்டிலேயே இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி, குறைந்த செலவில் கண்ணாடியை பளபளப்பாக மாற்ற முடியும்.
காகிதத்தை பயன்படுத்துங்கள்: கண்ணாடியை துடைக்க துணிக்குப் பதிலாக செய்தித்தாள் அல்லது டிஷ்யூ பேப்பரை பயன்படுத்தினால், ஈரப்பதம் மற்றும் கறைகள் எளிதில் நீங்கி, கோடுகள் இல்லாமல் பளிச்சென்று மாறும்.
டால்கம் பவுடர் அல்லது விபூதி: கண்ணாடியின் மேல் சிறிதளவு டால்கம் பவுடர் அல்லது விபூதியை தூவி, சில நிமிடங்கள் கழித்து மென்மையான காகிதம் அல்லது டஸ்டரால் துடைத்தால், கண்ணாடி பளபளப்பாக மாற உதவலாம்.
வெள்ளை வினிகர் கலவை: ஒரு ஸ்பூன் வெள்ளை வினிகரை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பவும். அதை கண்ணாடியில் தெளித்து, பின்னர் காகிதம் அல்லது மைக்ரோஃபைபர் துணியால் துடைத்தால் பிடிவாதமான கறைகளும் நீங்கும்.
எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாற்றில் சிறிதளவு தண்ணீர் கலந்து கண்ணாடியின் மீது தெளிக்கவும். பின்னர் மைக்ரோஃபைபர் துணியால் மெதுவாகத் துடைத்தால், கண்ணாடி மிளிரும்.
கண்ணாடியை நேரடியாக வெயில் படும் நேரத்தில் சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும். அப்போது சுத்தம் செய்யும் திரவம் விரைவாக உலர்ந்து கோடுகள் தோன்ற வாய்ப்பு அதிகம்.
வாரம் ஒருமுறை இந்த எளிய முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி கண்ணாடியை சுத்தம் செய்தால், அது நீண்ட நாட்கள் பளபளப்பாகவும், தெளிவாகவும் இருக்கும். வீட்டில் உள்ள ஜன்னல் கண்ணாடி, டிரஸ்ஸிங் மிரர் மற்றும் கண்ணாடி மேசைகளுக்கும் இதே முறைகளை பயன்படுத்தலாம்.