மாலை நேர சிற்றுண்டி: ருசியான பூசணிக்காய் கட்லெட்!

தினத்தந்தி

மாலை நேர சிற்றுண்டிக்கு சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் உணவாக பூசணிக்காய் கட்லெட் சிறந்த தேர்வாகும்.

பூசணிக்காயில் கண்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமான வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் உள்ளது. இதனால் இது சத்தான காய்கறியாகும். பூசணிக்காயை பயன்படுத்தி காரமும் இனிப்பும் பலவிதமான உணவுகளை எளிதில் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: பூசணிக்காய் (துருவியது) - 300 கிராம், உருளைக்கிழங்கு - 1, சோளமாவு - 2 தேக்கரண்டி, அரிசி மாவு - 2 தேக்கரண்டி, மிளகு தூள் - 1 தேக்கரண்டி, கறி மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி, வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, எலுமிச்சம்பழச்சாறு - 1 தேக்கரண்டி, ரொட்டித்தூள் - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு

செய்முறை : முதலில் துருவிய பூசணிக்காயை ஆவியில் வேகவைத்து குளிரவைக்க வேண்டும். அதே சமயம் உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் பூசணிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு தூள், கறி மசாலா தூள், எலுமிச்சம்பழச்சாறு, அரிசி மாவு, சோளமாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.

இந்த கலவையை கட்லெட் வடிவில் தட்டி, ரொட்டித்தூளில் புரட்டி 20 நிமிடங்கள் வைக்கவும். இதனால் கட்லெட் வடிவம் நன்றாக பிடிக்கும்.

பின்னர் வாணலியில் எண்ணெய் சூடானதும், கட்லெட்டுகளை மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

இப்போது சுவையான பூசணிக்காய் கட்லெட் தயாராகிவிட்டது. இதை தக்காளி சாஸுடன் சேர்த்து பரிமாறினால் இன்னும் ருசியாக இருக்கும்.

வித்தியாசமான வெண்டைக்காய் ரெய்தா!