தினத்தந்தி
கோடை காலத்தில் உடல் அதிகமான உஷ்ணத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. “இப்பவே ஹீட் அதிகம், இதுல வெயில் இன்னும் ஜாஸ்தி” என்று பலரும் புலம்புவது சாதாரணமாகிவிட்டது. இந்த வெப்பம் உடல்நலத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
வருடா வருடம் கோடையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டு வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ளது. தமிழகத்தின் பல நகரங்களில் வெப்பம் 100°F-ஐ தாண்டி, மக்கள் கடும் அவதியடைகிறார்கள்.
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது, உடலில் நீர் வியர்வையாக வெளியேறும் அளவும் அதிகரிக்கிறது. இதனால் அயர்ச்சி, தளர்ச்சி, தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும், அதிக வெப்பத்தால் வேர்க்குரு, அரிப்பு, தேமல், மணல்வாரி அம்மை, வயிற்றுப்பிரச்சனைகள் போன்ற உடல் உபாதைகளும் உருவாகின்றன. குழந்தைகள் உச்சி வெயிலில் விளையாடினால், வலிப்பு ஏற்படும் அபாயமும் இருக்கிறது.
இந்த நேரத்தில் தண்ணீர் அதிகமாக குடிப்பது மிகவும் அவசியம். தினமும் குறைந்தது 5 முதல் 7 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது உடல் உஷ்ணத்தை குறைக்கவும், சிறுநீரக கல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவும்.
வெள்ளரிக்காய், தர்பூசணி போன்ற நீர்ச்சத்து அதிகமான உணவுகளை சாப்பிட வேண்டும். இளநீர், மோர், பழச்சாறு போன்ற பானங்கள் உடலை குளிர்விக்க உதவுகின்றன. கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்களை தவிர்க்க வேண்டும்.
உடை அணிவதிலும் கவனம் தேவை. இறுக்கமான ஆடைகளை தவிர்த்து, தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது சிறந்தது. பகல் 12 முதல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியே செல்ல வேண்டுமெனில் குடை, தொப்பி, கண்ணாடி போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
கோடை காலத்தில் உணவிலும் கட்டுப்பாடு அவசியம். சிக்கன், கருவாடு போன்ற உணவுகளை தவிர்த்து, காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். காரமான உணவுகளை குறைத்தால் உடல் உஷ்ணம் கட்டுப்பாட்டில் இருக்கும் மற்றும் பல உடல் பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.