குழந்தைகளின் கையெழுத்தை மேம்படுத்த இந்த எளிய வழிகளை பின்பற்றுங்கள்!

தினத்தந்தி

"கையெழுத்து அழகாக இருந்தால் வாழ்க்கையும் அழகாக மாறும்" என்று சொல்வார்கள். ஒரு மாணவரின் அறிவையும், ஒழுக்கத்தையும் வெளிப்படுத்தும் முக்கிய அம்சங்களில் கையெழுத்தும் ஒன்று. தெளிவான கையெழுத்து ஆசிரியர்களுக்கு படிக்க எளிதாக இருப்பதுடன், தேர்விலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கையெழுத்து மோசமாக இருந்தால், சரியான பதில்களை எழுதியிருந்தாலும் மதிப்பெண்கள் குறைய வாய்ப்பு உள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் தட்டச்சு அதிகரித்தாலும், பள்ளி மாணவர்களுக்கு பேனா கொண்டு எழுதும் பழக்கம் இன்னும் மிகவும் அவசியமானதாகவே உள்ளது.

கையெழுத்தை மேம்படுத்த தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி எழுதும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். வீட்டுப்பாடம் மட்டும் எழுதாமல், பாடப்புத்தகங்களில் உள்ள பகுதிகள், சிறுகதைகள் அல்லது பத்திரிகை செய்திகளை நகலெடுத்து எழுதிப் பயிற்சி செய்தால் எழுத்தும் நினைவாற்றலும் மேம்படும்.

குழந்தைகளை கட்டாயப்படுத்தி எழுத வைப்பதை விட, அவர்களுக்குள் ஆர்வத்தை உருவாக்குவது மிகவும் முக்கியம். அவர்களுக்கு பிடித்த நோட்டுப் புத்தகம், வண்ணமயமான பேனா போன்ற எழுது பொருட்களை வாங்கிக் கொடுத்து, அவர்களின் சொந்த எண்ணங்களை எழுத ஊக்குவிக்கலாம்.

எழுதும்போது குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அவசரப்படுத்தக் கூடாது. ஆரம்பத்தில் நிதானமாகவும் அழகாகவும் எழுத பழக வேண்டும். தேர்வு காலங்களில் மட்டும் வேகத்தை அதிகரிக்கலாம். ஆனால் அந்த வேகம் கையெழுத்தின் தரத்தை பாதிக்கக் கூடாது.

குழந்தைகள் எழுதும்போது சரியான தோரணையில் அமர்ந்திருக்க வேண்டும். முதுகை நிமிர்த்தி, மேஜையில் கைகளை வசதியாக வைத்தபடி எழுதுவது நல்லது. பேனாவை விரல்களால் சரியாகப் பிடித்து எழுதினால் எழுத்துக்கள் தெளிவாகவும் அழகாகவும் அமையும்.

சரியான பேனாவை தேர்வு செய்வதும் கையெழுத்தை மேம்படுத்த உதவும். குழந்தைகளின் கைகளுக்கு ஏற்ற எடை மற்றும் பிடிப்பு கொண்ட பேனாவை பயன்படுத்த வேண்டும். மேலும், அடிக்கோடிட்ட வரிகள் கொண்ட நோட்டுப் புத்தகத்தில் எழுதினால் எழுத்துக்கள் நேராகவும் சீராகவும் அமையும்.

கையெழுத்தை அழகுபடுத்த தொடர்ந்து பயிற்சி மட்டுமே முக்கியம். தினமும் சில நிமிடங்கள் ஒதுக்கி எழுதும் பழக்கம், எழுத்தின் வடிவத்தையும் வேகத்தையும் இயல்பாக மேம்படுத்தும். பெற்றோர்கள் பாராட்டி ஊக்குவித்தால் குழந்தைகளின் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

டிஜிட்டல் காலத்தில் கடிதம் எழுதும் பழக்கம் குறைந்துவிட்டாலும், அது கையெழுத்தை மேம்படுத்த சிறந்த பயிற்சியாகும். நண்பர்கள், உறவினர்கள் அல்லது குடும்பத்தினருக்கு அவ்வப்போது கைஎழுத்தில் கடிதம் எழுதும் பழக்கத்தை வளர்த்தால், கையெழுத்து அழகாக மாறுவதோடு, உணர்வுகளை மனம் தொட்ட வகையில் பகிரும் திறனும் வளரும்.

பளபளக்கும் கூந்தலுக்கான 6 முக்கிய ஊட்டச்சத்துகள்!