மாதவிடாய் நாட்களில் பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்!

தினத்தந்தி

மாதவிடாய் காலகட்டத்தில் வயிறு தொடர்பான பிரச்சினைகளில் இருந்து விடுபட உணவு விஷயத்தில் பெண்கள் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும்.

மாதவிடாய் நாட்களில் பெண்கள் சந்திக்கும் சிரமங்கள் அதிகம். சில பெண்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே அதற்கான அறிகுறிகள் வெளிப்பட தொடங்கிவிடுகின்றன. அப்போது தலைவலி, மூட்டு வலி, முதுகுவலி, கை-கால் வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

உடலில் சோர்வும் அதிகமாக இருக்கும். சில பெண்களுக்கு முகப்பருக்களும் தோன்றலாம். ஆர்வமின்மை, கவனக்குறைவு, முன்கோபம், மனஅழுத்தம் போன்ற பிரச்சினைகளும் உருவாகலாம்.

அந்த காலகட்டத்தில் வயிறு தொடர்பான பிரச்சினைகளில் இருந்து விடுபட பெண்கள் வயிறு நிரம்ப சாப்பிடாமல், உணவை நான்கு அல்லது ஐந்து முறையாகப் பிரித்து சாப்பிட வேண்டும். எளிதில் ஜீரணமாகும் சத்தான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

உணவில் உப்பின் அளவையும் குறைக்க வேண்டும். உப்பு அதிகமாக சேர்த்து பதப்படுத்தப்படும் ஊறுகாய் வகைகள் மற்றும் பலகாரங்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள், நொறுக்கு தீனிகள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். மாதவிடாய் சமயங்களில் இஞ்சி டீ பருகுவது நல்லது. அது வலியை கட்டுப்படுத்த உதவும்.

சத்தான காய்கறிகள், கீரை வகைகள், முழு தானியங்கள் மற்றும் பழங்களை பெண்கள் சாப்பிட வேண்டும். பால் பருகுவதும் நல்லது. மேலும் எலுமிச்சை, ஆரஞ்சு, வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவதும் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

வாழைப்பழம், வெண்ணெய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆகியவற்றில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. அவற்றை சாப்பிடுவது பெண்களுக்கு நல்ல மனநிலையை வழங்க உதவும்.

மேலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மூச்சுப் பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றை செய்து வருவதும் நல்லது. அவை தலைவலி, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளை தவிர்க்க உதவும்.

சிறுநீரக கல் பிரச்சினையின் 6 முக்கிய அறிகுறிகள்!