தினத்தந்தி
தமிழக தேர்தல் வரலாற்றில் பிரசார பாடல்கள் என்பது வெறும் இசை மட்டுமல்ல, அவை வாக்காளர்களின் உணர்வுகளைத் தூண்டும் ஒரு கருவி. கலைஞர் கருணாநிதியை பற்றி பாடும் 'கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே' என்ற பாடல் மிகுந்த பிரபலம்.
அதேபோல எம்.ஜி.ஆருக்கு அவர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் ஒரு பிரசார பீரங்கியாக முழங்கியது. குறிப்பாக மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், ஓடி ஓடி உழைக்கணும், வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும், நீங்க நல்லா இருக்கனும் நாடு முன்னேற போன்ற பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.
2016-ம் ஆண்டு தேர்தலில் இந்த பூமி உள்ள வரை, எங்க அம்மா புகழே நிலைத்து இருக்கும் என்ற ஜெயலலிதாவின் புகழை பற்றி பாடும் இந்த பாடல் தமிழகம் முழுவதும் ஒலித்தது. அந்த தேர்தலிலும் அவர் 2-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், மு.க.ஸ்டாலினை பற்றி பாடப்பட்ட ஸ்டாலின்தான் வராரு, விடியல் தர போறாரு என்ற பிரசார பாடல் தமிழகத்தின் மூலை முடுக்கெடுல்லாம் பரவி, அவர் ஆட்சியில் அமர வழிவகை செய்தது.
அந்தவகையில் இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் த.வெ.க.வின் பிரசார பாடல்கள் பிரசார பொது கூட்டங்களில் மட்டுமல்லாமல், புதிய டிரெண்டாக சமூக வலைதளங்களிலிலும் தீயாய் பரவி இருக்கிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின், "ஸ்டாலின் தொடரட்டும். தமிழ்நாடு வெல்லட்டும்!" என்ற பிரசார பாடல் தற்போதைய ஆட்சியில் செய்த சாதனைகளைச் சொல்லும் வகையில், தி.மு.க. இந்தப் பாடலை தயார் செய்துள்ளது.
எடப்பாடி பழனிசாமியின், "தமிழ்நாடு ஜெயிக்கணும்னா, எடப்பாடியார் ஆளணும்" என்ற பிரசார பாடல், புரட்சித் தலைவர் வழி எங்க எடப்பாடியார் சிரிச்சுப்பேசுகிற தலைவனும் வேற யார், ஏழ வலி தெரிஞ்ச, ஏர் புடிச்ச பாமரன், எளிய மக்கள் நாயகன், நல்லாட்சி வேணுமுன்னா வரணும் எங்க எடப்பாடி என்று உள்ளது.
த.வெ.க. தலைவர் விஜய்-க்கு, "உங்க விஜய்... உங்க விஜய்... உயிரென வர்றேன் நான்" என்ற பாடல் மிகவும் பிரபலமாக இருக்கிறது. பாடலில், 'நேத்து வர தளபதி, இன்று முதல் மாறும் விதி, மக்கள் மன்னன்... ஆள வர்றான் நெருப்பா. கோடி மக்கள் உசந்திட... கோடிகள ஒதறிட்டு, அண்ணன் வர்றான் அதுவர பொறுப்பா' என்ற வரிகள் ஒலிக்கிறது.