தினத்தந்தி
பால் பாயசம் செய்யும்போது ஒரு கைப்பிடி பாதாம் பருப்பை அரைத்து சேர்த்தால், பாயசம் கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கும்.
வாழைப்பூ நறுக்குவதற்கு முன் கைகளில் சிறிது நல்லெண்ணெய் தடவினால், கைகளில் கறை படிவதைத் தவிர்க்கலாம்.
துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, வேக வைக்கும் போது சிறிது வெந்தயம் சேர்த்தால் பருப்பு விரைவாக வெந்து, சாம்பாரும் மணமாக இருக்கும்.
ராஜ்மாவை நன்றாக வேகவைத்து, கடுகு, இஞ்சி, மிளகாய் தாளித்து, இறுதியில் எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவை மேலும் அதிகரிக்கும்.
குழம்புப் பொடி அல்லது ரசப் பொடி அரைக்கும் போது காய்ந்த கறிவேப்பிலையையும் சேர்த்து அரைத்தால், உணவுக்கு கூடுதல் மணமும் சுவையும் கிடைக்கும்.
சிறுதானிய மாவில் முறுக்கு செய்யும்போது, வறுத்த உளுந்தம் பருப்புடன் பொட்டுக்கடலையையும் சேர்த்து அரைத்தால் முறுக்கு மொறுமொறுப்பாகவும் மென்மையாகவும் இருக்கும்.
கத்திரிக்காய் எண்ணெய் கறி சமைக்கும் போது ஒரு ஸ்பூன் கட்டியான தயிர் சேர்த்தால், கத்திரிக்காய் கருமையாகாமல் நிறத்தையும் சுவையையும் தக்கவைத்துக் கொள்ளும்.
கூட்டு அல்லது பொரியலுக்கு தேங்காய் இல்லையெனில், புழுங்கல் அரிசியை பொரித்து பொடி செய்து தூவினால் தேங்காய் சேர்த்தது போன்ற சுவை கிடைக்கும்.