தினத்தந்தி
தமிழகம் முழுவதும் பழமையான கோவில்கள் நூற்றுக்கணக்கில் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்தில் கலைநயத்துடன் இந்த கோவில்கள் கட்டப்பட்டிருந்தாலும், அந்த மன்னர்கள் வாழ்ந்த அரண்மனைகள் மற்றும் கோட்டைகள் அதிகமாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், தமிழ் மண்ணை ஆண்ட மன்னர்களின் வாழ்க்கை அடையாளமாக செஞ்சி கோட்டை இன்று வரை கம்பீரமாக காட்சியளித்து வருகிறது.
சுமார் 800 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இந்த கோட்டை, தமிழக மன்னர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் முக்கிய அடையாளமாக திகழ்கிறது. இதை ஐரோப்பியர்கள் “கிழக்கு உலகத்தின் டிராய் கோட்டை” என்று வர்ணித்துள்ளனர்.
இந்த கோட்டையைச் சுற்றி நான்கு மலைகள் அமைந்துள்ளன. அவற்றின் உச்சிகளில் ராஜகிரி, கிருஷ்ணகிரி, சந்திராயன் துர்க்கம், சங்கிலி துர்க்கம் போன்ற பல பாதுகாப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
மலைகளுக்கிடையில் கீழ்க்கோட்டை அமைந்துள்ளது. இங்கு சிவன் கோவில், வேணுகோபால சுவாமி கோவில், வெங்கடரமணர் கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் உள்ளன.
செஞ்சி கோட்டையை கோன் வம்ச அரசர்கள் கட்டியதாக கூறப்படுகிறது. அந்த வம்சத்தின் முதல் மன்னரான ஆனந்தக் கோன் இந்த கோட்டையை நிறுவியதாக வரலாறு சொல்கிறது. பின்னர் வந்த மன்னர்கள் இதை மேலும் விரிவுபடுத்தினர்.
பின்னர், இந்த கோட்டை பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு, செஞ்சி கோட்டை சுதந்திர இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
பல்வேறு வரலாற்று சிறப்புகளையும் ஆச்சரியங்களையும் தாங்கி இன்று வரை நிலைத்து நிற்கும் இந்த கோட்டைக்கு, யுனெஸ்கோ உலக பாரம்பரிய அந்தஸ்து வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.