தினத்தந்தி
கொய்யா பழம் உடல்நலத்திற்கு பல நன்மைகளை தருவது போல, அதன் இலைகளும் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொய்யா இலையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
முகப்பருக்களில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்க, கொய்யா இலைகளை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து முகத்தில் தடவவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் பருக்கள் குறையும்.
கொய்யா இலையில் அதிக அளவில் வைட்டமின் C உள்ளது. இது முகப்பரு உருவாவதைத் தடுக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள சத்துக்கள் தோலின் நிறத்தை மேம்படுத்தி, சுருக்கங்களை குறைக்க உதவுகின்றன.
கொய்யா இலைகளை காயவைத்து அரைத்து, நீருடன் கலந்து பேஸ்ட் போல முகத்தில் தடவினால் சுருக்கங்கள் குறைந்து, இளமை தோற்றம் கிடைக்கும்.
கொய்யா இலையுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை தொடர்ந்து செய்தால் முகம் பொலிவாகும்.
கற்றாழை சாறுடன் கொய்யா இலையை அரைத்து முகத்தில் பூசினால், சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
கொய்யா இலை மற்றும் பாதாம் பருப்பு இரண்டையும் அரைத்து முகத்தில் பூசினால் புதிய செல்கள் உருவாகி, முகம் மேலும் அழகாகும்.
கொய்யா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து குளிர்ந்த பிறகு தலையில் மசாஜ் செய்தால் முடி உதிர்வு குறைந்து, முடி பலமாகும்.
கவனிக்க: எந்தவொரு இயற்கை முறையையும் பயன்படுத்தும் முன், சிறிது அளவில் தோலில் சோதனை செய்து பயன்படுத்துவது நல்லது.