தினத்தந்தி
உணவுக்கு காரமும், சுவையும் சேர்ப்பதில் மிளகாய்க்கு முக்கிய பங்கு இருக்கிறது. காரமான உணவை விரும்புபவர்கள் மிளகாயின் சுவையை ரசிப்பார்கள். பச்சை மற்றும் சிவப்பு நிற மிளகாய்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றில் வைட்டமின் ஏ, பி6, சி, இரும்புச்சத்து, தாமிரம், பொட்டாசியம், புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி பீட்டா கரோட்டின், கிரிப்டோக்சாந்தின், லூட்டீன் போன்ற உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்துக்களும் அடங்கியுள்ளன.
பச்சை மிளகாய் உணவில் காரத்தன்மையை அதிகரிக்க பயன்படுத்தப்பட்டாலும், அதனை சாப்பிடுவதன் மூலம் பல்வேறு உடல்நல நன்மைகளையும் பெறலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பச்சை மற்றும் சிவப்பு மிளகாய்களில் எது அதிக நன்மை தருகிறது என்பதை பார்ப்போம்.
பச்சை மிளகாய் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமான செயல்முறையை சீராக்கி, குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
பச்சை மிளகாய் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ கண்கள் மற்றும் சருமத்திற்கு நன்மை தருகிறது.
பச்சை மிளகாயில் இருக்கும் பீட்டா கரோட்டின் இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இது சிறந்த ஆன்டி ஆக்சிடெண்டாகவும் செயல்படுகிறது.
பச்சை மிளகாயில் உள்ள வைட்டமின் சி சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடெண்டாக செயல்பட்டு புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. குறிப்பாக நுரையீரல், வாய்வழி மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கக்கூடும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சமையலில் சிவப்பு மிளகாய் தூள் சேர்ப்பது உணவின் சுவையையும் நிறத்தையும் மேம்படுத்துகிறது. பச்சை மற்றும் சிவப்பு மிளகாய்களின் ஊட்டச்சத்து மதிப்பில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் சிவப்பு மிளகாயை உலர்த்தும்போது அதில் உள்ள நீர்ச்சத்து குறைகிறது.
சிவப்பு மிளகாயில் உள்ள கேப்சைசின் உடலில் உள்ள கொழுப்பை எரிக்கும் செயல்முறையை வேகப்படுத்துகிறது. மேலும் மனநிலையை மேம்படுத்தும் ஹார்மோன்கள் உருவாகவும் உதவுகிறது.
சிவப்பு மிளகாயில் உள்ள வைட்டமின் சி, உடலில் மற்ற வைட்டமின்கள் நன்றாக உறிஞ்சப்பட உதவுகிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களுக்கு எதிராக போராடவும் துணைபுரிகிறது.
சிவப்பு மிளகாயில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் பயனுள்ளதாக இருக்கலாம் என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
இதய நோய்களின் அபாயத்தை குறைப்பதிலும் சிவப்பு மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்த உறைவு ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது.
சிவப்பு மற்றும் பச்சை மிளகாய் இரண்டிலும் ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அவற்றை அளவோடு பயன்படுத்துவது அவசியம். பச்சை மிளகாயை பச்சையாகவும் உணவில் சேர்த்தும் சாப்பிடலாம். சிவப்பு மிளகாயை தூளாக பயன்படுத்துவதற்குப் பதிலாக உலர்ந்த மிளகாயாக பயன்படுத்துவது சிறந்தது.