Subash T
குருமா, சட்னி போன்றவற்றிற்கு அவசரமாக அரைக்கும் நேரத்தில் ஜார் சூடாகி விடும். இதைத் தவிர்க்க ஐஸ் வாட்டர் சேர்த்து அரைக்கலாம்.
ஜவ்வரிசி பாயசம் செய்யும்போது இரண்டு டீஸ்பூன் வறுத்த கோதுமை மாவைப் பாலில் கரைத்து ஊற்றிச் செய்தால், பாயசம் கெட்டியாகவும், ருசியாகவும் இருக்கும்.
தேங்காய்க்கு பதில், வெங்காயத்துடன் பீர்க்கங்காயையும் வதக்கி அரைத்து சேர்த்தால் குழம்பு கெட்டியாகவும், சுவையாகவும் இருக்கும். இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்தும் கிடைக்கும்.
சாம்பார், ரசம், கூட்டு போன்றவற்றைத் தயாரித்து முடித்து தாளிக்கும்போது கடுகு வெடித்துச் சிதறும். இதைத் தவிர்க்க வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சிறிது மஞ்சள் தூள் போட்டு பிறகு கடுகு தாளித்தால் வெடித்துச் சிதறாது.
பருப்பு சாம்பாரை சீரகம் தாளித்து இறக்கும் முன்பு, சிறிதளவு புதினாவைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து இறக்கினால் சாம்பாரின் சுவை கூடும்.
கடலைப்பருப்பு போளி செய்யும்போது, பொடித்த சர்க்கரையைச்சேர்த்தால் போளி நிறமாகவும், சுவையாகவும், மெல்லியதாகவும் இருக்கும்.
இன்ஸ்டன்ட் மாவில் குலோப் ஜாமூன் செய்யப்போறீங்களா? மாவைக் கலக்கும்போது சிறிது வெண்ணெய் சேர்த்தால் ஜாமூன் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.
அரிசியையும், பருப்பையும் கலந்து வாசனை வரும் வரை வறுத்து, சர்க்கரைப் பொங்கல் செய்தால், பொங்கல் சீக்கிரமாக வெந்துவிடும். வாசனையாகவும் இருக்கும்.
பாயசம் செய்யும்போது, ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வறுத்துப் பின் நெய் சேர்த்து வறுத்தால் ஜவ்வரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.