தினத்தந்தி
வயிற்றில் ஏற்படும் வலிக்கு வெறும் வாயு மட்டுமே பிரச்சினை, அல்சர் மட்டுமே காரணம் என்று நினைக்க வேண்டாம். பல்வேறு நோய் தாக்குதலின் அறிகுறிகளாக கூட இருக்கலாம் என்கிறார்கள், மருத்துவர்கள்.
சிறுநீரக கல்லின் அறிகுறிகளும், அப்பென்டிசைட்டிஸ் (குடல்வால் அழற்சி) அறிகுறிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். வேறுபாடுகள் பலருக்கும் தெரிவதில்லை.
அடிவயிற்றின் வலது பக்கத்தில், இடுப்பு எலும்புக்கு மேலே, சிறுகுடலும் பெருங்குடலும் இணையும் இடத்தில், சிறிய விரல் அளவு இருக்கும் ஓர் உறுப்புக்கு குடல்வால் என்று பெயர்.
எண்டெரோகாக்கஸ், ஸ்ட்ரெப்டோகாக்கஸ், எஸ்செரிச்சியா கோலி போன்ற பாக்டீரியாக்கள் அசுத்தமான உணவு அல்லது நீர் மூலம் உடலுக்குள் நுழைந்து சிறுகுடலை அடையும்போது, குடல்வாலில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும்.
இதன் விளைவால் குடல்வாலில் அழற்சி உண்டாகிறது. இது எந்த வயதினருக்கும் வரலாம். குறிப்பாக 8 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
வாந்தி, குமட்டல், காய்ச்சல், தொப்புளைச் சுற்றி அல்லது வயிற்றின் வலது கைப்பக்கத்தின் அடிப்பாகத்தில் கடுமையான வலி போன்றவை ஏற்படும்.
கடுமையான வயிற்று வலியுடன் அடிக்கடி வயிற்றுப்பிடிப்பும் ஏற்படுமாயின், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். இந்த நிலையிலும் மருத்துவம் செய்யாமல் விட்டால், நோயின் கடுமை அதிகமாகி, குடல் வால் வெடித்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.