ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் மசாலா தோசை!

தினத்தந்தி

குழந்தைகள் தினமும் வித்தியாசமான உணவுகளைச் சாப்பிட ஆசைப்படுவார்கள். அவர்களுக்குப் பிடித்த பன்னீரை வைத்து இந்த சுவையான தோசையைச் செய்து கொடுத்தால், மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். ஹோட்டல் சுவையில் பன்னீர் மசாலா தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்; தோசை மாவு, பன்னீர் 2 கப், குடைமிளகாய் 1, வெங்காயம் 1, தக்காளி 1, பச்சை மிளகாய் 1, மஞ்சள் தூள் ½ தேக்கரண்டி, சீரகத் தூள் 1 தேக்கரண்டி, மிளகாய்த் தூள் 1 தேக்கரண்டி, கரம் மசாலா 1 தேக்கரண்டி, வெண்ணெய் தேவையான அளவு, கொத்தமல்லித்தழை சிறிதளவு, புதினா சிறிதளவு, உப்பு தேவையான அளவு, நெய் தேவையான அளவு.

செய்முறை; வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், குடைமிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பன்னீரைத் துருவி வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து உருகியதும் வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் சாஃப்ட்டானதும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள், சீரகத் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறவும்.

இப்போது துருவிய பன்னீரைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு, கொத்தமல்லித்தழை, புதினா ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும். பன்னீர் மசாலா தயாராகிவிட்டது.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தோசை மாவை ஊற்றி, தேவையான அளவு நெய் சேர்த்து மொறுமொறுப்பாக வேக விடவும்.

தோசையின் மேல் தயாரித்து வைத்துள்ள பன்னீர் மசாலாவைச் சேர்த்து பரப்பவும். அதன் மேல் சிறிதளவு வெண்ணெய் வைத்து, தோசையை இரண்டாக மடித்து தட்டில் மாற்றவும்.

இப்போது சுவையான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் மசாலா தோசை தயார். இதனுடன் தேங்காய் சட்னி சேர்த்துப் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.

கசப்பில்லாத சூப்பரான பாகற்காய் தொக்கு!