கசப்பில்லாத சூப்பரான பாகற்காய் தொக்கு!

தினத்தந்தி

பாகற்காயை வைத்து சுவையான தொக்கு செய்து சாதம், இட்லி, தோசை உள்ளிட்டவற்றுடன் பரிமாறலாம். பாகற்காயின் கசப்பு அதிகமாக தெரியாமல் இந்த முறையில் தொக்கு செய்து சுவையாக சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்; பெரிய பாகற்காய் - 1, தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி, மல்லி (தனியா) - 1 தேக்கரண்டி, சீரகம் - ½ தேக்கரண்டி, வரமிளகாய் – 6, புளி - 1 எலுமிச்சை அளவு, வெல்லம் - 1 எலுமிச்சை அளவு, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: எண்ணெய் - 3 மேசைக்கரண்டி, கடுகு - ¼ தேக்கரண்டி, உளுந்தம் பருப்பு - 4 தேக்கரண்டி, கடலைப் பருப்பு - 4 தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை.

முதலில் பாகற்காயை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து, துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, 1 தேக்கரண்டி உப்பு மற்றும் 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

அவ்வாறு ஊற வைத்த பாகற்காயில் இருந்து நீர் வெளியேறியதும், அந்த நீரை நன்றாகப் பிழிந்து அகற்றவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் தெளித்து மீண்டும் நன்றாகப் பிசைந்து கொள்ளவும். இதனால் பாகற்காயின் கசப்பு ஓரளவு குறையும்.

அடுத்து ஒரு கடாயை சூடாக்கி, அதில் மல்லி, சீரகம் மற்றும் வரமிளகாய் ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் நன்றாக வறுத்துக் கொள்ளவும். புளியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் வறுத்த மல்லி, சீரகம், வரமிளகாய், தேங்காய் துருவல், உப்பு, புளிக்கரைசல் மற்றும் வெல்லம் சேர்த்து நன்றாக அரைத்து விழுதாகத் தயாரித்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். பின்னர் பாகற்காயைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பாகற்காய் பாதியளவு வெந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கிளறவும். மிதமான தீயில் சுமார் 20 நிமிடங்கள் வேகவிடவும். தொக்கு அடர்ந்த சிவப்பு நிறத்திற்கு மாறி, எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

சுவையான பாகற்காய் தொக்கு தயார். இதை சாதம், இட்லி, தோசை உள்ளிட்டவற்றுடன் பரிமாறலாம்.

ஆரோக்கியம் நிறைந்த வெந்தயம் சாதம் செய்வது எப்படி?