சருமத்துக்கு ஏற்ற சோப்பை எப்படி தேர்வு செய்வது?

தினத்தந்தி

ஒரு காலத்தில் குளியலுக்கு நலுங்கு மாவு போன்ற இயற்கை குளியல் பொடிகள் பயன்படுத்தப்பட்டன. இன்று பெரும்பாலானோர் சோப்பையே பயன்படுத்துகின்றனர். ஆனால், எல்லா சோப்புகளும் எல்லோருடைய சருமத்திற்கும் பொருந்தாது. எனவே, சருமத்தின் தன்மைக்கு ஏற்ற சோப்பைத் தேர்வு செய்வது மிகவும் அவசியம்.

சோப்புகளில் சேர்க்கப்படும் சில ரசாயனங்கள் சிலருக்கு ஒவ்வாமை, அரிப்பு, சரும எரிச்சல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். அதனால் இயற்கை மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட தரமான சோப்புகளைத் தேர்வு செய்வது நல்லது.

வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு எண்ணெய் சுரப்பு குறைவாக இருக்கும். இவர்களுக்கு கிளிசரின் அல்லது ஆட்டுப்பால் கலந்த சோப்புகள் நல்ல ஈரப்பதத்தை வழங்கி, சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும்.

உணர்திறன் (சென்சிடிவ்) சருமம் உள்ளவர்கள் அதிக வாசனை மற்றும் செயற்கை நிறங்கள் சேர்க்கப்படாத சோப்புகளைப் பயன்படுத்த வேண்டும். தேவையெனில் சரும மருத்துவரின் ஆலோசனையுடன் பொருத்தமான சோப்பைத் தேர்வு செய்வது பாதுகாப்பானது.

எண்ணெய் பசை அதிகம் உள்ள சருமம் கொண்டவர்களுக்கு ஆன்டி-பாக்டீரியல் சோப்புகள் ஏற்றவை. வேப்பிலை அல்லது சாலிசிலிக் அமிலம் கலந்த சோப்புகள் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தவும், முகப்பரு உருவாகும் வாய்ப்பைக் குறைக்கவும் உதவுகின்றன.

சருமத் துளைகள் அடைபட்டிருப்பதாக உணர்பவர்கள் லாவெண்டர் அல்லது டீ ட்ரீ ஆயில் கலந்த சோப்புகளைப் பயன்படுத்தலாம். முகத்திற்கு சோப்பை விட, சருமத்துக்கு ஏற்ற பேஸ் வாஷ் பயன்படுத்துவது சிறந்த தேர்வாக இருக்கும்.

மூலிகை சோப்புகள் தற்போது அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட இயற்கை பொருட்களால் தயாரிக்கப்படும் இந்த சோப்புகள் சருமத்திற்கு ஊட்டச்சத்து வழங்கி, மென்மையையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவுகின்றன.

வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி போன்ற சத்துக்கள் கலந்த சோப்புகள் சருமத் தழும்புகளை குறைக்கவும், பொலிவை அதிகரிக்கவும் உதவுகின்றன. அதேபோல், ஸ்கிரப் சோப்புகள் இறந்த சரும செல்களை நீக்கி சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகின்றன.

சோப்பை வாங்கும்போது அதன் நிறம் மற்றும் மணத்திலும் கவனம் செலுத்துங்கள். மிகவும் அடர்த்தியான நிறம் அல்லது அதிக வாசனை கொண்ட சோப்புகளில் ரசாயனங்கள் அதிகமாக இருக்கலாம். எனவே இயற்கையான நிறம், மிதமான மணம் மற்றும் தரமான பொருட்களால் தயாரிக்கப்பட்ட சோப்புகளைத் தேர்வு செய்வதே சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

குழந்தைகளின் கையெழுத்தை மேம்படுத்த இந்த எளிய வழிகளை பின்பற்றுங்கள்!