குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா செய்வது எப்படி?

தினத்தந்தி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சில்லி பரோட்டாவை வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் எளிமையாகத் தயாரிக்கலாம். மீதமான பரோட்டாவை வைத்தும் இந்தச் சுவையான உணவைச் செய்யலாம்.

தேவையான பொருட்கள் :உதிர்த்த பரோட்டா – 2 பெரியது, பெரிய வெங்காயம் – 1, பெரிய தக்காளி – 1, பச்சை மிளகாய் – 1, குடமிளகாய் – ½, தக்காளி சாஸ் – 2 தேக்கரண்டி, மிளகாய்த்தூள் – ¼ தேக்கரண்டி, கரம் மசாலாத்தூள் – ¼ தேக்கரண்டி, எலுமிச்சைச் சாறு – 1 முதல் 2 தேக்கரண்டி, எண்ணெய் – 4 தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லித்தழை அல்லது வெங்காயத்தாள் – சிறிதளவு, அஜினமோட்டோ – ஒரு சிட்டிகை (விருப்பப்பட்டால்).

செய்முறை; முதலில் வெங்காயம், தக்காளி, குடமிளகாய் ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும்.

பரோட்டாவைச் சிறு துண்டுகளாக உதிர்த்து வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், தக்காளி, குடமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி சாஸ் சேர்த்துக் கலக்கவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து, காய்கறிகள் மென்மையாகும் வரை மிதமான தீயில் வேகவிடவும். அஜினமோட்டோ சேர்ப்பதாக இருந்தால் மிகக் குறைந்த அளவில் சேர்க்கலாம்; இது கட்டாயமில்லை.

இப்போது மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். மசாலா கலவை காய்கறிகளுடன் நன்கு சேரும் வரை வதக்கவும்.

உதிர்த்து வைத்துள்ள பரோட்டாத் துண்டுகளைச் சேர்த்து, மசாலா அனைத்துப் பகுதிகளிலும் படும்படி நன்றாகக் கிளறவும். தேவைப்பட்டால் சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.

கடைசியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை அல்லது வெங்காயத்தாளைத் தூவி அலங்கரிக்கவும். சுவையான சில்லி பரோட்டாவைச் சூடாகப் பரிமாறவும்.

சுவையான ஐயங்கார் வீட்டு எள் சாதம்!