தினத்தந்தி
பீட்ரூட் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த காய்கறியாகும். குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இந்த பீட்ரூட்டை வைத்து சுவையான குழம்பு செய்யலாம்.
தேவையான பொருட்கள்: பீட்ரூட் - 1, தக்காளி - 1, வெங்காயம் - 1, கீறிய பச்சைமிளகாய் - 2, குழம்பு மிளகாய் பொடி - 1 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவைக்கு, கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு.
முதலில் பீட்ரூட், வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதன் பிறகு வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழையும்வரை வதக்கவும்.
அதன்பின் பீட்ரூட், உப்பு மற்றும் குழம்பு மிளகாய் பொடி சேர்த்து நன்றாக கிளறி, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
பீட்ரூட் நன்றாக வெந்து தண்ணீர் சுண்டியதும் அடுப்பை அணைத்தால் சுவையான பீட்ரூட் குழம்பு தயார். சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.