சூப்பரான கத்திரிக்காய் பிரியாணி செய்வது எப்படி?

தினத்தந்தி

கத்திரிக்காய் பிடிக்காதவர்கள் கூட இந்த கத்திரிக்காய் பிரியாணியை விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டிலேயே எளிமையான முறையில் சுவையான கத்திரிக்காய் பிரியாணியை தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்; பாசுமதி அரிசி - 250 கிராம், வெங்காயம்- 1, கத்திரிக்காய் - 100 கிராம், தக்காளி - 3, மிளகாய்த்தூள் - 1¼ டீஸ்பூன், தனியாத்தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ¼ டீஸ்பூன், புதினா - 1 கைப்பிடி, கறிவேப்பிலை - 1 கைப்பிடி, கொத்தமல்லி - 1 கைப்பிடி, இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தேவையான அளவு, நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு.

செய்முறை; வெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பாசுமதி அரிசியை அரை வேக்காடாக வேகவைத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

கத்திரிக்காயை வட்ட வடிவில் நறுக்கி, அதில் சிறிதளவு மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். எண்ணெயில் பொரிக்க விரும்பாதவர்கள் தோசைக்கல்லில் போட்டு வறுத்தும் எடுத்துக்கொள்ளலாம்.

அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி குழைந்து வந்ததும் தனியாத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும்.

பின்னர் புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் வறுத்த கத்திரிக்காயைச் சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாகக் கலக்கவும்.

கத்திரிக்காய் மசாலாவில் பாதியை தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள மசாலாவில் வேகவைத்த சாதத்தில் பாதியைச் சேர்த்து மெதுவாகக் கிளறவும்.

அதன் மேல் எடுத்து வைத்துள்ள கத்திரிக்காய் மசாலாவை பரப்பி, மீதமுள்ள சாதத்தை அதன் மேல் சேர்க்கவும். சிறிது நெய் ஊற்றி பாத்திரத்தை மூடி, குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்து இறக்கவும்.

பின்னர் சாதம் உடையாமல் மெதுவாகக் கிளறிப் பரிமாறவும். சுவையான கத்திரிக்காய் பிரியாணி தயார்!

10 நிமிடத்தில் செய்யலாம் சுவையான தேங்காய் லட்டு!