ஹோட்டல் ஸ்டைலில் சுவையான காடை பிரியாணி செய்வது எப்படி?

தினத்தந்தி

காடையில் கொலஸ்ட்ரால் குறைவாகவும், கோழி இறைச்சியை விட அதிக ஊட்டச்சத்துகளும் உள்ளன. மேலும், கோழி முட்டையில் சுமார் 11% புரதம் இருந்தால், காடை முட்டையில் சுமார் 13% புரதம் இருப்பதாகக் கூறப்படுகிறது. சுவையும் சத்தும் நிறைந்த ஹோட்டல் ஸ்டைல் காடை பிரியாணியை வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.

தேவையான பொருட்கள்: காடை – 4, சீரகச் சம்பா அரிசி – 750 கிராம், வெங்காயம் – 150 கிராம், தக்காளி – 100 கிராம், பச்சை மிளகாய் – 5, புதினா இலை – 50 கிராம், கொத்தமல்லித்தழை – 50 கிராம், மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ½ டீஸ்பூன், தயிர் – 50 மில்லி, தேங்காய்ப்பால் – 100 மில்லி, பட்டை – 2 துண்டு, ஏலக்காய் – 2, கிராம்பு – 4, பிரிஞ்சி இலை – 1, இஞ்சி-பூண்டு விழுது – 50 கிராம், எண்ணெய் – 100 மில்லி, நெய் – 50 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி வைக்கவும். காடையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சீரகச் சம்பா அரிசியை கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அதன்பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தக்காளியை சேர்த்து நன்கு குழையும் வரை சமைக்கவும்.

இப்போது சுத்தம் செய்த காடையை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கிளறி, தேவையானால் அரைத்த பிரியாணி மசாலாவையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து தயிர், தேங்காய்ப்பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு ஊறவைத்த சீரகச் சம்பா அரிசியை சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் வேகவிடவும்.

இறுதியாக தீயை மிதமாக்கி, நெய் ஊற்றி மெதுவாக கிளறவும். மேலே புதினா இலை மற்றும் கொத்தமல்லித்தழை தூவி, பாத்திரத்தை மூடி 20 நிமிடங்கள் தம் போடவும்.

சுவையான, மணமிக்க ஹோட்டல் ஸ்டைல் காடை பிரியாணி தயார். ரைத்தா, கத்திரிக்காய் தொக்கு அல்லது வெங்காய சாலட்டுடன் பரிமாறினால் சுவை இன்னும் அதிகரிக்கும்.

கருப்பு கொண்டைக்கடலை குழம்பு!