சுவையான பச்சை மிளகாய் பச்சடி செய்வது எப்படி?

தினத்தந்தி

இட்லி, தோசை, தயிர் சாதம் ஆகியவற்றுடன் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் பச்சை மிளகாய் பச்சடியை வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம். காரம், புளிப்பு, இனிப்பு என மூன்று சுவைகளும் கலந்த இந்தப் பச்சடியை எப்படித் தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்; -பச்சை மிளகாய் - 100 கிராம், சின்ன வெங்காயம் - 100 கிராம், தனியாத்தூள் - 2 மேசைக்கரண்டி, மஞ்சள்தூள் - ½ தேக்கரண்டி, புளி – எலுமிச்சை அளவு, பொடித்த வெல்லம் - 4 மேசைக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.

அரைக்க வேண்டியவை: தேங்காய்த் துருவல் - 5 மேசைக்கரண்டி. தாளிக்க வேண்டியவை: எண்ணெய் - 4 மேசைக்கரண்டி, கடுகு - 1 மேசைக்கரண்டி, உளுத்தம்பருப்பு - 2 மேசைக்கரண்டி.

செய்முறை; பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

புளியை 100 மில்லி தண்ணீரில் ஊறவைத்து நன்றாகக் கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும். தேங்காய்த் துருவலை மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் புளிக்கரைசல், தனியாத்தூள், மஞ்சள்தூள், வெல்லத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். பச்சை மிளகாயின் பச்சை வாசனை நீங்கி மசாலா நன்றாகக் கொதிக்க விடவும்.

பின்னர் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்துக் கிளறவும். பச்சடி கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை அணைக்கவும்.

பச்சடி அதிகக் காரமாக இருந்தால், சுவைக்கேற்ப சிறிதளவு வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம். ஆறியதும் சுத்தமான, உலர்ந்த பாத்திரத்தில் மாற்றி வைக்கவும். சுவையான பச்சை மிளகாய் பச்சடி தயார்!

சுவையான காடை பெப்பர் கிரேவி செய்வது எப்படி?