சத்தான கேழ்வரகு இடியாப்பம் செய்வது எப்படி?

தினத்தந்தி

கேழ்வரகு (ராகி) கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த சிறுதானியமாகும். காலை உணவாகவோ அல்லது மாலை நேர டிபனாகவோ சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் கேழ்வரகு இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு - 1 கப், அரிசி மாவு - ¼ கப், உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - 2 கப், நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்.

செய்முறை: முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கேழ்வரகு மாவை சேர்த்து 4 நிமிடங்கள் லேசாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதனுடன் அரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

வேறொரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, கொதித்த நீரை மாவுக் கலவையில் சிறிது சிறிதாக ஊற்றி கரண்டியால் கிளறவும். பின்னர் கையால் மென்மையாக பிசைந்து, மூடி வைத்து 15 நிமிடங்கள் ஓய்வெடுக்க விடவும்.

15 நிமிடங்கள் கழித்து மாவில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து மீண்டும் நன்றாக பிசையவும். அதன் பிறகு மாவை இடியாப்பம் அச்சில் நிரப்பவும்.

இட்லி தட்டுகளில் லேசாக எண்ணெய் தடவி, அதன்மேல் மாவை இடியாப்பமாக பிழியவும். பின்னர் இட்லி பாத்திரம் அல்லது குக்கரில் வைத்து சுமார் 7 நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும்.

இடியாப்பம் வெந்ததும் வெளியே எடுத்து சிறிது ஆறவிடுங்கள். அதன் பிறகு மெதுவாக எடுத்து பரிமாறவும்.

சத்தான, மென்மையான கேழ்வரகு இடியாப்பம் தயார். இதனை தேங்காய் பால், காய்கறி குருமா, தேங்காய் சட்னி அல்லது வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் சுவை இன்னும் அதிகரிக்கும்.

கேழ்வரகு முறுக்கு செய்வது எப்படி?