தினத்தந்தி
கேழ்வரகு (ராகி) ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானியமாகும். இதில் புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. எனவே கேழ்வரகில் தயாரிக்கப்படும் உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் சிறந்ததாக கருதப்படுகின்றன.
தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு - 1 கப், அரிசி மாவு - ½ கப், கடலை மாவு - ¼ கப், பெருங்காயத்தூள் - ½ டீஸ்பூன், எள் - 1 டேபிள்ஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை: ஒரு அகலமான பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். அதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், எள், சீரகம் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
பின்னர் ஒரு கரண்டி சூடான எண்ணெயை மாவில் ஊற்றி நன்றாக கலந்து, சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மென்மையான முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும்.
வாணலியில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி நன்றாக காயவைக்கவும். முறுக்கு அச்சில் மாவை நிரப்பி, சூடான எண்ணெயில் நேரடியாக பிழியவும்.
மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுத்து, எண்ணெய் வடிந்ததும் ஆறவிடவும்.
மொறுமொறுப்பான, சுவையான கேழ்வரகு முறுக்கு தயார். இதை காற்று புகாத டப்பாவில் சேமித்து பல நாட்கள் பயன்படுத்தலாம்.