தினத்தந்தி
தேவையான பொருட்கள்: ராகி மாவு - 2 கப், வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்பூன், கருப்பு எள் - 2 டேபிள்ஸ்பூன், வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன், வெல்லம் - தேவையான அளவு, பாதாம் - சிறிதளவு, முந்திரி - சிறிதளவு, உப்பு - 1 சிட்டிகை, நெய் அல்லது எண்ணெய் - விருப்பத்திற்கு.
செய்முறை: முதலில் ராகி மாவில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் தெளித்து பிசையவும். அதை சிறிய அடைகளாக தட்டி, தோசைக்கல்லில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து அல்லது சேர்க்காமல் வேகவைத்து ஆறவிடவும்.
ஒரு வாணலியில் வேர்க்கடலையை நன்கு வறுத்து, இறக்கும் முன் வெள்ளை எள், கருப்பு எள், பொட்டுக்கடலை, பாதாம் மற்றும் முந்திரியை சேர்த்து லேசாக வறுத்து இறக்கவும்.
அடை மற்றும் வறுத்த கலவைகள் ஆறியதும், அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு நன்றாக பொடியாக அரைக்கவும். பின்னர் வெல்லத்தையும் சேர்த்து மீண்டும் அரைத்து, அனைத்தையும் ஒன்றாக நன்கு கலக்கவும்.
கலவையை கைகளால் சிறிய உருண்டைகளாக பிடித்தால், சத்தான மற்றும் சுவையான ராகி லட்டு தயார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான இனிப்பு இது.
ராகியில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், இந்த லட்டு எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்க உதவுகிறது. வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இது சிறந்த சத்தான சிற்றுண்டியாகும்.
எள், வேர்க்கடலை, பாதாம் மற்றும் முந்திரி போன்ற பருப்புகள் சேர்க்கப்படுவதால், உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு, புரதச்சத்து மற்றும் தாதுக்கள் கிடைக்கின்றன. வெல்லம் சேர்ப்பதால் சுவையுடன் இரும்புச்சத்தும் கிடைக்கிறது.
இந்த ராகி லட்டை காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்தால் ஒரு வாரம் வரை சுவை மாறாமல் இருக்கும். காலை அல்லது மாலை நேரத்தில் பால் அல்லது சத்தான பானங்களுடன் சாப்பிட்டால் ஆரோக்கியமான ஸ்நாக்ஸாக இருக்கும்.