ஆறு மாதங்கள் ஆனாலும் கெட்டுபோகாத தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி?

தினத்தந்தி

தக்காளி ஊறுகாய் செய்வது மிகவும் சுலபமானது. தோசை, சப்பாத்தி, இட்லி, தயிர் சாதம் ஆகியவற்றுடன் தொட்டுக்கொள்ள இந்தச் சுவையான தக்காளி ஊறுகாயை செய்து வைத்துக்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்; நன்கு பழுத்த நாட்டுத் தக்காளி - 1 கிலோ, பூண்டு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 15, மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி, துருவிய வெல்லம் - 3 மேசைக்கரண்டி, நல்லெண்ணெய் - 150 கிராம், கடுகு - 2 மேசைக்கரண்டி, வெந்தயம் - 1 மேசைக்கரண்டி, பெருங்காயத் தூள் - 1 தேக்கரண்டி, கல் உப்பு - தேவையான அளவு.

செய்முறை; தக்காளியை நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பூண்டின் தோலை உரித்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாய், வெந்தயம், கடுகு ஆகியவற்றை தனித்தனியாகப் போட்டு வறுத்துக்கொள்ளவும். இறுதியாக தேவையான அளவு கல் உப்பையும் சேர்த்து சிறிது வறுத்து, அனைத்தையும் நன்றாக ஆறவிடவும்.

ஆறியதும் வறுத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக்கொள்ளவும். பின்னர் அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து 100 கிராம் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் பூண்டை முழுவதுமாகச் சேர்த்து நன்றாக வதக்கவும். பூண்டு நன்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்றாக வதக்கிக்கொள்ளவும்.

தக்காளி நன்கு வதங்கி சுருண்டு வரும்போது மஞ்சள் தூள் மற்றும் துருவிய வெல்லத்தைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

தக்காளி நன்றாக வெந்து, எண்ணெய் பிரிந்து சுருண்டு வரும்போது அரைத்து வைத்துள்ள பொடியைத் தூவி, பெருங்காயத் தூளையும் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

இரண்டு கொதி வந்ததும் மீதமுள்ள 50 கிராம் நல்லெண்ணெயை ஊற்றி நன்றாகக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும். ஊறுகாய் முழுமையாக ஆறியதும் காற்று புகாத சுத்தமான டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். சுவையான தக்காளி ஊறுகாய் தயார்!

சத்தான சுவையான முட்டைகோஸ் சாதம்!