சத்தான சுவையான முட்டைகோஸ் சாதம்!

தினத்தந்தி

முட்டைகோஸில் பல்வேறு சத்துக்கள் உள்ளன. இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் சுவையான முட்டைகோஸ் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்; முட்டைகோஸ் - 200 கிராம், வடித்த சாதம் - 1 கப், கடலைப்பருப்பு -1 தேக்கரண்டி, ஊறவைத்த பாசிப்பருப்பு - 2 மேசைக்கரண்டி, மிளகு–சீரகத்தூள் - 1 தேக்கரண்டி, வறுத்த வேர்க்கடலை - 1 மேசைக்கரண்டி, இஞ்சி - 1 மேசைக்கரண்டி, பட்டை - சிறிய துண்டு, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - 1 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.

cதாளிக்க; கடுகு - 1 தேக்கரண்டி, உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை; முதலில் கொத்தமல்லித்தழை, இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். முட்டைகோஸையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

வடித்த சாதம் சூடாக இருக்கும்போதே சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கிளறி வைத்தால், சாதம் உதிரியாக இருக்கும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

பின்னர் பட்டை, மிளகு, சீரகத்தூள், கடலைப்பருப்பு, உப்பு, வேர்க்கடலை ஆகியவற்றை சேர்த்துக் கிளறவும். தொடர்ந்து ஊறவைத்த பாசிப்பருப்பு மற்றும் நறுக்கிய இஞ்சியை சேர்த்து வதக்கவும்.

அடுத்து பொடியாக நறுக்கிய முட்டைகோஸை சேர்த்து நன்றாக வதக்கவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து முட்டைகோஸ் வேகும் வரை சமைக்கவும்.

முட்டைகோஸ் நன்றாக வெந்ததும், இந்த மசாலாவை உதிரியாக வைத்துள்ள சாதத்தில் சேர்த்து மெதுவாகக் கிளறவும். இறுதியாக கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும். சுவையான, சத்தான முட்டைகோஸ் சாதம் தயார்.

சூப்பரான மங்களூர் இனிப்பு போண்டா!