சத்துக்கள் நிறைந்த கீரை சாதம் செய்வது எப்படி?

தினத்தந்தி

கீரை உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்கும் ஆரோக்கியமான உணவாகும். கீரை சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கும் இந்த கீரை சாதத்தை சுவையாக செய்து கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள்: முளைக்கீரை - 1 கட்டு, பாசுமதி அரிசி - 200 கிராம், பட்டை - சிறிதளவு, கிராம்பு - சிறிதளவு, ஏலக்காய் - சிறிதளவு, பூண்டு - 2 பல், துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - 2, நெய் - 50 கிராம், தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முதலில் கீரையை நன்றாக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். துவரம்பருப்பை வேகவைத்து வைத்துக் கொள்ளவும். அரிசியை கழுவி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து வறுத்து ஆறவிடவும்.

பின்னர் சிறிதளவு நெய்யில் பூண்டை வதக்கி, வறுத்த பொருட்களுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

குக்கரில் மீதமுள்ள நெய்யை ஊற்றி கீரையை லேசாக வதக்கவும். அதனுடன் அரைத்த கலவை, ஊற வைத்த அரிசி, வேகவைத்த துவரம்பருப்பு, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

ஒரு பங்கு அரிசிக்கு ஒரு பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.

சூடாக பரிமாறினால் சுவையான, சத்தான கீரை சாதம் தயார்.

மிளகை அதிகமாக சாப்பிட்டால் என்ன ஆகும்?