ஓணம் ஸ்பெஷல் அவியல் செய்வது எப்படி?

தினத்தந்தி

ஓணம் பண்டிகை விருந்தில் தவறாமல் இடம்பெறும் பாரம்பரிய கேரள உணவுகளில் அவியல் முக்கியமானது. பலவிதமான காய்கறிகள், தேங்காய் மற்றும் தயிர் சேர்த்து செய்யப்படும் இந்த அவியல் சுவையிலும், சத்திலும் சிறந்தது.

தேவையான பொருட்கள்: சௌசௌ - 150 கிராம், உருளைக்கிழங்கு - 150 கிராம், கேரட் - 150 கிராம், பூசணிக்காய் - 150 கிராம், வாழைக்காய் - 150 கிராம், வெங்காயம் - 150 கிராம், தேங்காய் துருவல் – ½ கப், பச்சை மிளகாய் - 4, தயிர் - ½ கப், சீரகம் - 1 டேபிள்ஸ்பூன், கடுகு - ½ டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முதலில் சௌசௌ, உருளைக்கிழங்கு, கேரட், பூசணிக்காய், வாழைக்காய் மற்றும் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

மிக்ஸியில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.

குக்கரில் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து, அவை வேகும் அளவு தண்ணீர் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து சுமார் 2 விசில் அல்லது மென்மையாகும் வரை வேகவிடவும்.

வேகவைத்த காய்கறிகளில் அதிகப்படியான தண்ணீர் இருந்தால், அடுப்பில் வைத்து லேசாக வற்ற விடவும். பின்னர் அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

அதன்பின் தயிரை சேர்த்து மெதுவாக கிளறி, 2 நிமிடங்கள் மட்டும் சமைத்து அடுப்பை அணைக்கவும். தயிர் சேர்த்த பிறகு அதிக நேரம் கொதிக்க விட வேண்டாம்.

ஒரு சிறிய வாணலியில் தேங்காய் எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி அவியலில் சேர்க்கவும்.

இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி மெதுவாக கிளறி இறக்கினால், சுவையான ஓணம் ஸ்பெஷல் அவியல் தயார். இதை சாதம், அடை, அப்பம் அல்லது ஓணம் சாப்பாட்டுடன் பரிமாறலாம்.

சத்தான கேழ்வரகு இடியாப்பம் செய்வது எப்படி?