தினத்தந்தி
கேரளாவில் மிகவும் பிரபலமான மாலை நேர சிற்றுண்டிகளில் ஒன்று நேந்திரம் பழ பஜ்ஜி. இனிப்பு சுவையுடன் மொறுமொறுப்பாக இருக்கும் இந்த பஜ்ஜி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது.
தேவையான பொருட்கள்: நேந்திரம் பழம் - 1, மைதா மாவு - ½ கப், உப்பு - 1 சிட்டிகை, சர்க்கரை - 2½ தேக்கரண்டி, சமையல் சோடா - 2 சிட்டிகை, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: முதலில் நேந்திரம் பழத்தின் தோலை நீக்கி, வட்டமாக அல்லது நீளமாக அரை செ.மீ. கனத்தில் நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் உப்பு, சர்க்கரை, சமையல் சோடா சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய நேந்திரம் பழத் துண்டுகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும்.
மிதமான தீயில் வேக வைத்து, ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரிக்கவும்.
பொன்னிறமாக வெந்ததும் எடுத்து பரிமாறுங்கள். இப்போது சூடான, சுவையான நேந்திரம் பழ பஜ்ஜி தயார்.