தினத்தந்தி
தேவையான பொருட்கள்: பச்சரிசி – 1 கிலோ, வெல்லம் – 600 முதல் 750 கிராம், ஏலக்காய் – 5 முதல் 6, சுக்குப்பொடி – 1 டீஸ்பூன் (விருப்பத்திற்கு), கடலை எண்ணெய் – பொரிப்பதற்கு.
செய்முறை: முதலில் பச்சரிசியை நன்றாக கழுவி, அதில் இருக்கும் ஈரம் முழுமையாக வற்றும் வரை நிழலில் காயவைக்கவும். பின்னர் அரிசியை ஏலக்காயுடன் சேர்த்து லேசான கொரகொரப்பான பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் சேர்த்து கொதிக்கவைத்து பாகு தயாரிக்க வேண்டும். பாகு விரல்களுக்கு இடையில் தொட்டுப் பார்க்கும்போது மெல்லிய நூல் பதம் வந்தால் போதுமானது.
பின்னர் அந்த வெல்லப் பாகை அரைத்து வைத்துள்ள அரிசி மாவில் ஊற்றி, சுக்குப்பொடியையும் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த மாவை ஒரு பாத்திரத்தில் மூடி வைத்து 2 முதல் 3 நாட்கள் ஊறவிட வேண்டும்.
மாவு நன்றாக பதம் பெற்ற பிறகு, சிறிது மாவை எடுத்து வாழை இலையில் வைத்து வட்டமாக தட்டவும். இதனை சூடான கடலை எண்ணெயில் இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
அவ்வளவுதான்! மணமும் சுவையும் நிறைந்த பாரம்பரிய அதிரசம் தயார். இந்த செய்முறையில் கூடுதலாக வேறு எந்தப் பொருளையும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.