இட்லி, தோசைக்கு அருமையான வடை கறி!

தினத்தந்தி

தேவையான பொருட்கள்; கடலைப்பருப்பு - 150 கிராம், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 1, கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 5, லவங்கம், பட்டை, ஏலக்காய் - தலா 2, பிரிஞ்சி இலை - 1, சோம்பு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன், மிளகாய்த்தூள், பொட்டுக்கடலை மாவு - 3 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை; தக்காளியை அரைத்து, வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

இட்லித் தட்டில் எண்ணெய் தடவி, அரைத்த கடலைப்பருப்புக் கலவையை வைத்து இட்லி போல் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதை உதிர்த்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, ஏலக்காய், லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

அரைத்த தக்காளி விழுது மற்றும் உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

கொதித்ததும் வேகவைத்த கடலைப்பருப்பை உதிர்த்து சேர்க்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி சிறிது நேரம் கொதிக்க விடவும்.

கடைசியில் பொட்டுக்கடலை மாவை சிறிது தண்ணீரில் கரைத்து சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி, பூரி, இட்லி, தோசை, சப்பாத்தி, ஆப்பம் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.

கடலைப்பருப்பில் உடல் வளர்ச்சிக்கு தேவையான புரதச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன. முளைகட்டிய பருப்புகளை உணவில் சேர்ப்பதும் ஆரோக்கியமான உணவுமுறையின் ஒரு பகுதியாக இருக்கலாம்.

ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் மசாலா தோசை!