அளவுக்கு மீறி தண்ணீர் குடிப்பது ஆபத்தா?

தினத்தந்தி

தாகத்தை தணிக்கவும், உடலின் நீர்ச்சத்தை சமநிலைப்படுத்தவும் தண்ணீர் மிகவும் அவசியம். உடலின் ஒவ்வொரு செல்லும் சரியாக செயல்பட தண்ணீர் தேவைப்படுகிறது. மேலும், நச்சுக்கள் வெளியேறவும், மலச்சிக்கலை தடுக்கவும், உடல் வெப்பநிலையை சீராக்கவும் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதேவேளையில், தேவைக்கு அதிகமாக தண்ணீர் பருகுவதும் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். அளவுக்கு மீறி தண்ணீர் குடிக்கும் போது, உடலில் உள்ள சோடியம் அளவு நீர்த்துப் போகும். இந்த நிலைக்கு “ஹைப்போநாட்ரீமியா” என்று பெயர்.

உடலில் உள்ள உப்பு மற்றும் பிற எலக்ட்ரோலைட்டுகள் நீர்த்துப்போகும்போது, திரவ சமநிலை பாதிக்கப்படும். இதனால் வாந்தி, குமட்டல், சோர்வு, தலைசுற்றல் மற்றும் தசை பிடிப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றக்கூடும்.

அதிக அளவு தண்ணீர் பருகும்போது, அதை வெளியேற்ற சிறுநீரகங்கள் கூடுதல் வேலை செய்ய வேண்டியிருக்கும். இதனால் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக வியர்வை மற்றும் உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

சிறுநீரகங்கள் நாளொன்றுக்கு அதிக அளவு திரவத்தை சுத்திகரிக்கும் திறன் கொண்டிருந்தாலும், தொடர்ந்து அதிக தண்ணீர் பருகுவது அதன் இயல்பான செயல்பாட்டிற்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் உடல் சீர்கேடுகள் உருவாக வாய்ப்பு உள்ளது.

இரவு நேரங்களில் அதிகமாக தண்ணீர் குடிப்பது தூக்கத்திற்கு இடையூறு விளைவிக்கலாம். தூங்கும் நேரத்தில் உடலில் செயல்படும் ஹார்மோன்கள், சிறுநீர் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த உதவுகின்றன. ஆனால் அதிக தண்ணீர் குடித்தால், இரவில் அடிக்கடி எழுந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால் உடலில் பொட்டாசியம் அளவும் குறையக்கூடும். இதனால் கால் வலி, உடல் வலி, எரிச்சல் மற்றும் தசை பலவீனம் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.

உடலில் உள்ள சோடியம் அளவு குறையும் போது, நீர் செல்களுக்குள் அதிகமாக நுழைகிறது. இதனால் செல்கள் வீக்கம் அடையலாம். அதன் காரணமாக தசைகள் மற்றும் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

பொதுவாக தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருகுவது போதுமானது. கோடை காலங்களில் சற்று அதிகமாக தண்ணீர் குடிக்கலாம். அதேசமயம், மோர், பழச்சாறு, சூப் போன்ற திரவ உணவுகளையும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

முகத்துக்கு நீராவி குளியல் எடுப்பதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள்!