தினத்தந்தி
முகத்துக்கு நீராவி குளியல் எடுப்பது என்பது சருமத்தின் துளைகளை திறக்க செய்து, அதில் படிந்திருக்கும் அழுக்கு, அதிக எண்ணெய் தன்மையை அகற்றி முகத்தை புத்துணர்ச்சி அடைய செய்யும் எளிய இயற்கை பராமரிப்பு முறையாகும்.
இதனை சரியான முறையில் பின்பற்றி வந்தால் முகப்பரு குறைதல், சருமம் பொலிவாகுதல், ரத்த ஓட்டம் மேம்படுதல் உள்பட பல நன்மை கள் கிடைக்கும். முகத்துக்கு பொலிவு தரும் பல்வேறு நீராவி குளியல் முறை பற்றிய விவரம் வருமாறு:-
சாதாரண தண்ணீர்: வெறும் தண்ணீரை மட்டும் கொதிக்க வைத்து முகத்துக்கு நீராவி பிடித்தால் சரும துளைகளை திறக்கும். அழுக்கு மற்றும் தூசியை அகற்றும் மற்றும் முகப்பருக்கள் குறைய உதவும்.
கிரீன் டீ தண்ணீர்: ஒரு கிரீன் டீ பேக்கை சூடான நீரில் போடுங்கள். அல்லது ஒரு ஸ்பூன் கிரீன் டீ இலை சேர்க்கலாம். இது முகப்பருவை குறைக்க உதவும். சரும எரிச்சலை குறைக்கும் மற்றும் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும்.
வேப்பிலை தண்ணீர்: 5-10 வேப்பிலைகளை தண்ணீரில் கொதிக்க விடுங்கள். அதன் பிறகு முகத்துக்கு நீராவி பிடித்தால் கிருமி எதிர்ப்பு தன்மை உண்டாகும். மேலும் முகப்பருக்களை குறைக்கும்.
எலுமிச்சை/ஆரஞ்சு தோல்: எலுமிச்சை தோல் அல்லது ஆரஞ்சு தோலை சூடான நீரில் சேர்த்து நீராவி பிடித்தால் சருமத்தை பிரகாசமாக்கும் மற்றும் எண்ணெய் தன்மையை கட்டுப்படுத்த உதவும்.
ரோஜா நீர்: 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் ரோஸ் வாட்டரை சூடான நீரில் சேர்த்து நீராவி பிடித்தால் சருமத்துக்கு உடனடி புத்துணர்ச்சி தரும். முகத்திற்கு இயற்கை அழகு தரும் மற்றும் சருமத்தை மென்மையாக்கும்
தவிர்க்க வேண்டியவை: முகத்தில் அதிக நேரம் நீராவி படக்கூடாது. 5 முதல் 8 நிமிடங்கள் போதுமானது. பாத்திரத்துக்கு மிக அருகில் முகத்தை வைக்க வேண்டாம். அதிக சூடு உள்ள நீராவி முகத்தில் படக்கூடாது. அது சருமத்தை பாதிக்கலாம்