Subash T
ஒரு நாளைக்கு அனைவரும் கட்டாயம் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக இருந்தாலும், அது அனைவருக்கும் பொருந்தக்கூடிய பொதுவான விதி அல்ல. வயது, உடல் எடை, காலநிலை, உடற்பயிற்சி மற்றும் உடல்நிலை ஆகியவற்றைப் பொறுத்து தண்ணீரின் தேவை மாறுபடும்.
குழந்தைகளைத் தவிர, பெரும்பாலான பெரியவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1.5 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் பருகுவது நல்லது. வெப்பமான காலநிலை அல்லது அதிக உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு இதைவிட அதிக தண்ணீர் தேவைப்படலாம்.
நாம் ஓய்வில் இருந்தாலும் உடல் தொடர்ந்து நீரை இழக்கிறது. சிறுநீர், வியர்வை, சுவாசம் மற்றும் சருமத்தின் வழியாக ஆவியாதல் போன்ற செயல்முறைகள் மூலம் தினமும் சுமார் 2 முதல் 3 லிட்டர் வரை நீர் உடலில் இருந்து வெளியேறுகிறது.
20 முதல் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வாழும் ஆரோக்கியமான ஒருவருக்கு சிறுநீர் வழியாக சுமார் 500 மி.லி. திரவமும், சுவாசம் மற்றும் சருமத்தின் வழியாக மேலும் சுமார் 700 மி.லி. நீரும் இழக்கப்படுகிறது. இதனால் உடலுக்கு போதிய அளவு தண்ணீர் வழங்குவது மிகவும் அவசியம்.
ஆரோக்கியமான சிறுநீரகங்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 800 மி.லி. முதல் 1 லிட்டர் வரை சிறுநீரை வெளியேற்றும் திறன் கொண்டவை. ஆனால் அதற்காக ஒரே நேரத்தில் அல்லது ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பது பாதுகாப்பானது அல்ல.
அதிக அளவில் தண்ணீர் பருகுவது ரத்தத்தில் உள்ள சோடியத்தின் அளவை குறைத்து, ஹைபோநெட்ரீமியா (Hyponatremia) என்ற ஆபத்தான நிலையை ஏற்படுத்தக்கூடும். எனவே தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
உடலுக்கு போதிய நீரேற்றம் உள்ளதா என்பதை அறிய சிறுநீரின் நிறத்தை கவனிக்கலாம். சிறுநீர் வெளிர் மஞ்சள் அல்லது தெளிவான நிறத்தில் இருந்தால் உடலில் போதுமான நீர் இருப்பதாக கருதலாம். அடர் மஞ்சள் நிறமாக இருந்தால், கூடுதலாக தண்ணீர் பருக வேண்டியதன் அறிகுறியாகும்.
எனவே, தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற ஒரே விதியைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, உடலின் தேவையையும் தாக உணர்வையும் கவனித்து, சூழ்நிலைக்கு ஏற்ப போதுமான அளவு தண்ணீர் பருகுவதே ஆரோக்கியமான பழக்கமாகும்.