தினத்தந்தி
வாழைக்காயில் வைட்டமின் A, வைட்டமின் B6, வைட்டமின் C, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
வாழைக்காயில் காணப்படும் அதிக அளவு மாவுச்சத்து மற்றும் பெக்டின் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும்.
ப்ரீ ராடிக்கல்ஸ் மற்றும் ஆக்ஸிடேட்டிவ் சேதத்துக்கு எதிராக செயல்பட உடலுக்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அவசியம். வாழைக்காய் இத்தகைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை கொண்டதால், உடலின் செல்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
வாழைக்காயில் உள்ள பெக்டின் மற்றும் மாவுச்சத்து, உணவுக்குப் பிறகு ரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் திடீர் மாற்றங்களை கட்டுப்படுத்துகிறது. மேலும், இது குறைந்த கிளைசீமிக் குறியீட்டைக் (Low Glycemic Index) கொண்டுள்ளது.
உருளைக்கிழங்கைப் போலவே வாழைக்காயிலும் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இந்த பொட்டாசியம் இயற்கை வாஸோடைலேட்டராக செயல்பட்டு, தசை சுருக்கம் மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவுகிறது.
மலம் கழிக்க சிரமப்படுபவர்கள் தொடர்ந்து வாழைக்காய் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இது செரிமானத்தை மேம்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளது.
வாழைக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உடலுக்கு நிலையான கார்போஹைட்ரேட்டை வழங்கி, வளர்சிதை மாற்றத்தை (Metabolism) மேம்படுத்துகின்றன.
மேலும், இதில் உள்ள வைட்டமின் B6 மற்றும் வைட்டமின் C தலைமுடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்காற்றுகின்றன.