தினத்தந்தி
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தைகள் சராசரியாக 14 வயதில்தான் பருவமெய்தினார்கள். தற்போது 9 வயதில்கூட சில குழந்தைகள் பருவமெய்துகின்றனர்.
மிகக் குறைந்த வயதில் பருவமெய்தினால், தலைப்பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி, சிறுநீரகத்துக்கு அருகில் இருக்கும் அட்ரினல் சுரப்பி மற்றும் சினை முட்டை உருவாகும் இடம் ஆகியவற்றில் ஏதேனும் கட்டி உள்ளதா என்று சோதிப்போம்.
முன்பு போல் தற்போது குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதில்லை. பெரும்பாலும் உட்கார்ந்தபடியே இருப்பதால், உடல் இயக்கம் குறைவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இன்றைய உணவுப் பழக்கமும் இயற்கைக்கு புறம்பானதாக இருக்கிறது. குழந்தைகள் உண்ணும் உணவில் தேவையான சத்துகள் இல்லாமல், கொழுப்புச்சத்து, உப்பு, சர்க்கரை ஆகியவை அதிகமாக இருக்கின்றன. இதனால் உடல் எடை அதிகரிக்கிறது. குறிப்பிட்ட எடையை எட்டியதும் பருவமெய்துவதென உடலுக்கு ஒரு கணக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
குறைந்த வயதில் பருவமெய்திய பெண் குழந்தைகளுக்கு சினைப்பையில் நீர்க்கட்டி எனப்படும் பி.சி.ஓ.எஸ். இருக்கிறதா என்றும் பரிசோதிக்க வேண்டும். இதனால் மாதவிடாய் பிரச்சனை, கரு உண்டாவதில் தாமதம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.
காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக்கொண்டு, இறைச்சியை அளவாக உட்கொள்வது நல்லது. உணவுப் பழக்கத்தில் தேவையான மாற்றங்களைச் செய்வதும் முக்கியம்.
குறைந்த வயதில் பருவமெய்துவதற்கு உளவியல் ரீதியான காரணங்களும் இருக்கலாம். பிட்யூட்டரி சுரப்பிக்கு மேலே இருக்கும் ஹைப்போதாலமஸ், உணர்வையும் உடலையும் இணைக்கும் முக்கியப் பகுதியாக செயல்படுகிறது.