தினத்தந்தி
நாட்டுக்கோழி என்றாலே பலருக்கும் நாவில் எச்சில் ஊறும். நாட்டுக்கோழிக் குழம்பு, வறுவல் எனப் பல வகைகளில் சமைக்கலாம். அந்த வரிசையில் மசாலா மணத்துடன் சுவையான குற்றாலம் ஸ்பெஷல் நாட்டுக்கோழி சுக்காவை வீட்டிலேயே எளிதாகச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்; நாட்டுக்கோழி – ½ கிலோ, சின்ன வெங்காயம் – 30, இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி, மல்லித்தூள் – 3 மேசைக்கரண்டி, மிளகாய்த்தூள் – 1 மேசைக்கரண்டி, மிளகு – 1 தேக்கரண்டி, சீரகம் – 1 தேக்கரண்டி, கரம் மசாலாத்தூள் – 1 தேக்கரண்டி, மஞ்சள்தூள் – ½ தேக்கரண்டி, பட்டை – 2 துண்டுகள், கிராம்பு – 2, நல்லெண்ணெய் மற்றும் உப்பு – தேவையான அளவு.
அரைக்க வேண்டிய மசாலா; தேங்காய்த் துருவல் – தேவையான அளவு, கசகசா – 1 தேக்கரண்டி, முந்திரிப்பருப்பு – 5, மிளகு – 1 தேக்கரண்டி, சீரகம் – 1 தேக்கரண்டி.
செய்முறை; முதலில் தேங்காய்த் துருவல், கசகசா, முந்திரிப்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றைச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் சுத்தம் செய்த நாட்டுக்கோழியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
கோழியுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து, கோழி நன்றாக வேகும் வரை சமைக்கவும்.
கோழி வெந்ததும் தண்ணீர் அதிகமாக இருந்தால் வற்றவிடவும். பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
மசாலா கோழியில் நன்றாகப் படிந்து தண்ணீர் வற்றும் வரை மிதமான தீயில் வதக்கவும். இறுதியாகச் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சுவையான குற்றாலம் ஸ்பெஷல் நாட்டுக்கோழி சுக்கா தயார்!