தினத்தந்தி
உலகின் மகிழ்ச்சியான நாடு என்றதும் பின்லாந்து நினைவுக்கு வருகிறது. அந்த நாடு தொடர்ந்து பல ஆண்டுகளாக உலகின் மிக மகிழ்ச்சியான நாடாக திகழ்கிறது.
மகிழ்ச்சி குறைந்த நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது. ‘உலக மகிழ்ச்சி அறிக்கை 2026’ன் படி, 147 நாடுகளில் 147-வது இடத்தில் இருந்து, உலகின் மிக மகிழ்ச்சியற்ற நாடாக உள்ளது.
பொருளாதார நெருக்கடி, மோதல்கள், தாலிபான் ஆட்சியில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகியவை அந்நாட்டு மக்களின் மனநிலையை பாதிக்கின்றன.
ஆப்கானிஸ்தானை தொடர்ந்து சியரா லியோன் (146-வது) மற்றும் மலாவி (145-வது) ஆகிய நாடுகள் மகிழ்ச்சியற்ற நாடுகளின் வரிசையில் அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளன.
சியரா லியோன் நாடு கடுமையான வறுமை மற்றும் அரசியல் நிலையற்ற தன்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நடந்த உள்நாட்டுப் போரின் பின்விளைவுகள் இன்றும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை நிலைகுலைய வைத்துள்ளன.
மலாவி நாடும் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தத்தளித்துக்கொண்டிருக்கிறது. உணவு பாதுகாப்பின்மை, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவை அனைத்து தரப்பினருக்கும் சென்றடைவதில் சவால்கள் நிலவுவது, அந்நாட்டின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியை பாதிக்கிறது.
இந்த பட்டியலில் அடுத்த இடத்தில் ஜிம்பாப்வே நாடு உள்ளது. அந்நாடு கடும் பணவீக்கம், அரசியல் நிலையற்ற தன்மை மற்றும் வறுமை ஆகியவற்றை எதிர்கொண்டு வருகிறது. அவை அந்நாட்டு மக்களின் மகிழ்ச்சியை பெரிதும் பாதிக்கின்றன.
ஜிம்பாப்வேயை தொடர்ந்து போட்ஸ்வானா நாடு இடம் பெற்றுள்ளது. அங்கு நிலவும் கடும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சுகாதாரம், கல்வி போன்றவை சில தரப்பினருக்கே முழுமையாக கிடைப்பது அந்நாட்டின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியை பாதிக்கும் காரணங்களாக உள்ளன.