தினத்தந்தி
அல்வா என்றாலே நெய் அல்லது எண்ணெய் அதிகமாக பயன்படுத்தப்படும். ஆனால், மஸ்கோத் அல்வா தேங்காய்ப்பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால் தனித்துவமான சுவையுடன் இருக்கும். வீட்டிலேயே எளிதாக இந்த அல்வாவை செய்து ருசிக்கலாம்.
தேவையான பொருட்கள்: மைதா – ½ கப், தேங்காய் – 1, சர்க்கரை – 1½ கப், முந்திரி – 10.
செய்முறை: முதலில் அல்வா செய்வதற்கு முந்தைய நாள் மைதாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, தண்ணீரில் ஊறவைக்கவும். மறுநாள் அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து நன்றாகப் பிசையவும். பின்னர் பால் போன்ற பதத்தில் இருக்கும் மைதா கலவையை வடிகட்டி, கிடைக்கும் மைதா பாலை தனியாக வைத்துக்கொள்ளவும்.
தேங்காயைத் துருவி, தண்ணீர் சேர்க்காமல் அரைத்து பால் பிழிந்து எடுக்கவும். சுமார் 3 கப் தேங்காய்ப்பால் கிடைக்கும்படி எடுத்துக்கொள்ளலாம்.
அடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து, அதில் தேங்காய்ப்பால், சர்க்கரை, முந்திரி மற்றும் வடிகட்டி வைத்துள்ள மைதா பால் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
தொடர்ந்து அடுப்பை மிதமான தீயில் வைத்து, கலவை கெட்டியாகும் வரை விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். தேங்காய்ப்பாலில் உள்ள இயற்கையான கொழுப்பு வெளியேறி, கலவை அல்வா பதத்திற்கு வரத் தொடங்கும்.
அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும். பின்னர் நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகளாக வெட்டி பரிமாறலாம்.