ஓணம் பண்டிகையின் பாரம்பரியம், வரலாறு!

தினத்தந்தி

கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழா ஓணம். சாதி, மத வேறுபாடின்றி மலையாளிகள் அனைவராலும் கொண்டாடப்படும் இப்பண்டிகை, கேரளாவின் அறுவடைத் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.

மலையாள ஆண்டான கொல்லவர்ஷத்தின் சிங்கம் மாதத்தில் அத்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் வரை 10 நாட்கள் ஓணம் கொண்டாடப்படுகிறது. திருவோணம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் இந்த விழா, மகாபலி மன்னரின் நினைவுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

கேரளத்தை சிறப்பாக ஆட்சி செய்த மகாபலி மன்னர் தானம், தர்மம் செய்வதில் சிறந்து விளங்கியதாக புராணங்கள் கூறுகின்றன. ஒருமுறை வேள்வி நடத்தியபோது வாமன அவதாரத்தில் வந்த திருமால், அவரிடம் மூன்றடி நிலம் கேட்டார்.

மகாபலியும் அதற்கு சம்மதித்தார். வாமனன் முதல் அடியால் பூமியையும், இரண்டாவது அடியால் விண்ணையும் அளந்தார். மூன்றாவது அடிக்கு இடம் இல்லாததால், மகாபலி தனது தலையையே வழங்கியதாக புராணக் கதை கூறுகிறது.

மகாபலி தனது நாட்டு மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்ததால், ஆண்டுக்கு ஒருமுறை அவர்களைச் சந்திக்க வரம் கேட்டதாக நம்பப்படுகிறது. அதன்படி திருவோண நாளில் மகாபலி பூலோகத்திற்கு வந்து மக்களைச் சந்திப்பதாக கேரள மக்கள் நம்புகின்றனர். அவரை வரவேற்கும் விதமாகவே ஓணம் கொண்டாடப்படுகிறது.

ஓணம் ஸ்பெஷல் உணவுகள்; ஓணம் பண்டிகையில் பல்வேறு பாரம்பரிய உணவுகள் தயாரிக்கப்பட்டு வாழை இலையில் பரிமாறப்படும். ‘காணம் விற்றாவது ஓணம் உண்’ என்ற பழமொழி ஓண சாத்யாவின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது. சாதம், பருப்பு, நெய், சாம்பார், அவியல், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், பச்சடி, கிச்சடி, எரிசேரி, பப்படம், ஊறுகாய், அடை பிரதமன் உள்ளிட்ட பல உணவுகள் இதில் இடம்பெறும்.

ஓணம் ஸ்பெஷல் அத்தப்பூக்கோலம்; ஓணம் பண்டிகையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று அத்தப்பூக்கோலம். மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக வீட்டு வாசலில் பல்வேறு வண்ண மலர்களால் பூக்கோலம் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் புதிய மலர்களைச் சேர்த்து, திருவோணம் அன்று அத்தப்பூக்கோலம் மிகவும் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்படுகிறது.

புத்தாடை; ஓணம் பண்டிகையின்போது பெண்கள் கசவு என்று அழைக்கப்படும் பாரம்பரிய வெண்ணிற ஆடைகளை அணிந்து மகிழ்கின்றனர். குடும்பத்தினருடன் புத்தாடை அணிந்து பண்டிகையைக் கொண்டாடுவதும் ஓணத்தின் முக்கிய பாரம்பரியங்களில் ஒன்றாகும்.

பாரம்பரிய போட்டிகள்; ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெறும். குறிப்பாக படகுப் போட்டிகள், பாரம்பரிய நடனங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மக்களை வெகுவாகக் கவர்கின்றன.

ஓணம் கொண்டாட்டத்தின் 10 நாட்கள்; ஓணம் திருவிழா அத்தம் முதல் திருவோணம் வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அத்தம், சித்திரை, சோதி, விசாகம், அனிசம், திருக்கேட்டா, மூலம், பூராடம், உத்திராடம் மற்றும் திருவோணம் என நாட்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன. இதில் திருவோணம் மிகவும் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது.

தஞ்சாவூர் ஸ்பெஷல் சூரியகலா ஸ்வீட்..வீட்டிலேயே செய்வது எப்படி?